நான் அல்ல, கிறிஸ்துவே (Not I, but Christ)

கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார், நான் இப்பொழுது மாம்சத்தில்  பிழைத்திருக்கிறதோ,  என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலாத்தியர் 2:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/X7aQYcpvcCw

அப்போஸ்தலனாகிய பவுல் சுயத்தை மையப்படுத்தி ஜீவிக்கிற வாழ்க்கையிலிருந்து கிறிஸ்துவை மையப்படுத்தி வாழ்வதற்குத் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தவர். ஆகையால் தான் நான் அல்ல, கிறிஸ்து என்றான். தன்னை கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டவன் என்றும், கிறிஸ்துவின் சிலுவையின் காயத்தின் தழும்புகளைச்   சரீரத்தில் அணிந்தவன் என்றும், சிலுவையைக் குறித்தேயல்லாமல்  வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டமாட்டேன் என்றும் அறிக்கையிட்டான். கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் சுயத்தையும், மாம்சத்தையும், உலகத்தையும் மையப்படுத்தி ஜீவிப்பதை விட்டுவிட்டு, சிலுவையை மையப்படுத்தி, சிலுவை நாதரை மையப்படுத்தி ஜீவிப்பதற்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல், நானல்ல கிறிஸ்துவே என்று மேற்குறிப்பிட்ட வசனத்தில் அறிக்கையிட்ட சூழ்நிலையைப் பார்க்கும் போது, பேதுரு எருசலேமிலிருந்து முதல் முதலாய் புறஜாதிகளுக்கென்று நிறுவப்பட்ட  அந்தியோகியா சபைக்கு வருகிறான். வந்தஉடன்  புறஜாதிகளோடு ஐக்கியம் கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறவனாகக் காணப்பட்டான். ஆனால் யாக்கோபினால் அனுப்பப்பட்ட சில யூதர்கள் எருசலேமிருந்து வந்தபோது, அவர்களுக்குப் பயந்து, புறஜாதிகளோடு ஐக்கியம் கொள்ளுவதையும், சாப்பிடுவதையும் தவிர்த்து விலகினான். அவனோடு சேர்ந்து மற்ற யூதர்களும், பர்னபாவும் மாய்மாலம் பண்ணினார்கள். இப்படி ஏற்கனவே கொர்நேலியுவின் காரியத்தில் கர்த்தர் ஜனங்களிடத்தில் பட்சபாதமுள்ளவரல்ல என்பதை அப். 10ன் மூலம் அவனுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தும், பேதுரு இன்னும் சுயத்தை மையப்படுத்தி, யூத மார்க்கத்தை முக்கியப்படுத்தி,  புறஜாதிகளை அற்பமாக்கக் கருதி மாய்மாலம் பண்ணுகிறவனாகக் காணப்பட்டான். இப்படி சுவிசேஷத்தின்  சத்தியத்திற்கேற்பப்  பேதுரு நடவாததைப் பவுல் கண்டு, அவனை முகமுகமாய் எதிர்த்து, நீ செய்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்டினான். இந்நிலையில் தன்னைக் குறித்து பவுல் கூறும்போது, நான் கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையிலறையப்பட்டேன், ஆயினும், பிழைத்திருக்கிறேன், இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்று சாட்சி பகிர்ந்தான்.  

கர்த்தருடைய பிள்ளைகளே, நான் என்று சொல்லுவதையும், நம்முடைய சுயத்தையும், நம்முடைய  சமுதாய, பாரம்பரிய மேட்டிமைகளையும் விட்டு வெளியே வந்து, எல்லாம் இயேசு என்று அறிக்கையிடுங்கள்.  கிறிஸ்துவிலிருந்த தாழ்மை, கீழ்ப்படிதல், நீதி, பரிசுத்தம் ஆத்தும பாரம் நமக்குள்ளும் இருக்கட்டும். நம்மை மறைத்து கிறிஸ்துவை வெளிப்படுத்தி, அவர் நம்மில் பெருகும்படிக்கு இடம்கொடுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் வாசனை உங்கள் மூலம் மற்றவர்கள் நடுவில் வீசும், நீங்கள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகளாகக் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *