ஆதியிலே தேவன் (In the beginning God)

ஆதி 1:1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/IKtaYyKpL10

மனிதனுக்கு அனுதினமும் செய்யவேண்டிய காரியங்கள் அநேகம் இருக்கிறது. காலையில் எழுந்து பல்துலக்க ஆரம்பித்தவுடன் அன்றைய தேவைகள் அநேகம் நம்முடைய நினைவில் வந்துவிடுகிறது. பள்ளிக்கூட மாணவனுக்கு பள்ளிக்கூடத்தில் நடக்கும் பரீட்சை, வீட்டுப்பாடம் நினைவில் வந்துவிடுகிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு, எப்படி இந்த நாளை குதூகலமாக செலவழிக்கலாம் என்ற நினைவு வந்துவிடுகிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு எப்படி பணத்தை சேமிப்பது என்ற நினைவு வருகிறது. இப்படு மனிதனுக்கு பலவிதமான நினைவுடன் காலையிலேயே வந்துவிடுகிறது.

மத் 6:31-33 வசனங்கள் கூறுகிறது, ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்பதாக. முதலாவது மற்ற காரியத்தை குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களை, அஞ்ஞானிகள் என்று வேதம் அழைக்கிறது.

வேதாகமம் ஆரம்பிக்கும்போதே ஆதியிலே தேவன் என்று தான் ஆரம்பிக்கிறது. ஆகையால், நாம் முதலாவது காலை எழுந்தவுடன் தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுப்பது என்று சிலர் நினைக்கலாம். ஆதி 1:1ல் ஆதியிலே தேவன் என்று எழுதப்பட்டிருக்கிறது; யோவா 1:1 ல் ஆதியிலே வார்த்தை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்று வசனம் கூறுகிறது. இந்த வசனங்கள் தேவனும் வார்த்தையும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆகையால் முதலாவது நாம் வார்த்தைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். காலை எழுந்தவுடன் தேவனுடைய சத்தத்தை வார்த்தையின் மூலம் கேளுங்கள். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்று சங் 119 :105 கூறுகிறது. நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நாள் வெளிச்சமாக இருக்கவேண்டுமென்றால், வேத வசனத்தோடு அந்த நாளை தொடங்குங்கள். ஒவ்வொருநாளும் இப்படி செய்வீர்களென்றால், அந்த நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு செல்லும்போது, உங்கள் நித்திரை இன்பமாய் இருக்கும். அதை தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான், ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது (சங் 42:8) என்பதாக.

ஆதியிலிருந்து இருக்கும் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது முதலாவது அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார். ஆண்டவர் அவருடைய வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்க்கிறார். மற்ற எல்லா காரியங்களையும் விட தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *