ஜெபம் வீணாகவில்லை (Prayer is not in vain)

ஏசா 65:24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3ytppSES-_w

அக்கிரம சிந்தையில்லாமல் ஏறெடுக்கிற ஜெபத்தை ஆண்டவர் ஒருநாளும் நிராகரிப்பவருமில்லை, தள்ளிவிடுவதுமில்லை. இந்த வருஷம் இதுவரைக்கும் நீங்கள் ஏறெடுத்த எல்லா ஜெபத்தையும் ஆண்டவர் கேட்டார், உங்கள் வேண்டுதல்களெல்லாம் அவர் சந்நிதியில் போய் எட்டியது. இந்த வருஷத்தில் உங்கள் ஜெபத்திற்கு கொடுத்த ஆண்டவரின் பதில் சில நிறைவேறியிருக்கலாம், சில பதில்கள் வருங்காலங்களில் நிறைவேற ஆயத்தமாயிருக்கலாம். எப்படியாக இருந்தாலும் உங்கள் ஜெபம் வீணாகவில்லை என்பதை அறிந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் கூப்பிடுவதற்கு முன்பாக மறு உத்தரவு கொடுத்த சந்தர்ப்பங்கள் உண்டு; நீங்கள் அவரிடம் பேசும்போதே அவர் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

அன்னாள் சொல்லுகிறாள், இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார் (1 சாமு 1:27) என்பதாக. நம்முடைய ஆண்டவர் கேட்டதை தருகிறவர். கேட்ட வீடு, கேட்ட வாகனம், கேட்ட வேலையை, கேட்ட குழந்தையை, கேட்ட ஆசீர்வாதத்தை கொடுத்தாரே, அதை நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அன்னாளின் விண்ணப்பம் வீணாகப்போகவில்லை; அதுபோல, உங்கள் விண்ணப்பமும் வீணாகப்போகவில்லை.

தானியேல் ஜெபித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது ஒரு தூதன் வந்து சொல்லுகிறான், நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன் (தானி 9:23) என்பதாக. எத்தனையோ மன வேதனைகளில் இருந்தபோது, ஜெபிக்க கூட முடியாத அளவிற்கு மன அழுத்தம் போன்ற சூழ்நிலை வந்தபோது, ஜெபிக்க தொடங்கும்போதே ஆண்டவர் உங்களுக்கு செவிகொடுத்தாரே, அதை நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். தானியேல் ஒரு ஜெப வீரன்; அந்த ஜெப வீரன் ஜெபிக்க ஆரம்பித்தவுடன் பதில் வந்தது.

இப்படி எத்தனையோ ஜெபங்கள் ஏறெடுத்தீர்கள். அந்த ஜெபங்களெல்லாம் வீணாகப்போகவில்லை.குடும்பங்கள் நிராகரித்தபோது நீங்கள் ஏறெடுத்து ஜெபம் வீணாகவில்லை; யோசேப்பை தன்னுடைய சகோதரர்கள் குழியில் தள்ளினதுபோல, உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உங்களை தள்ளியபோது ஏறெடுத்த ஜெபம் வீணாகவில்லை. ஆடுமேய்த்த தாவீதை உயர்த்தியவர், உங்களையும் உயர்த்தவேண்டும் என்று நீங்கள் ஜெபித்த ஜெபம் வீணாகவில்லை. இழந்ததை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜெபித்தபோது, இழந்த வேலையை, சரீர நன்மையை கொடுத்தாரே, அந்த ஜெபம் வீணாகப்போகவில்லை. என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் என்று யாக்கோபு போராடி ஜெபித்ததுபோல, நீங்கள் போராடி ஜெபித்த ஜெபமும் வீணாகவில்லை. ஆகையால் நிறைவேறின வாக்குத்தத்தங்களுக்காகவும், நிறைவேறப்போகிற வாக்குத்தத்தங்களுக்காகவும் தேவனை மகிமைப்படுத்துங்கள். தேவனை மகிமைப்படுத்துவது என்றால் என்ன? எப்படி நான் தேவனை மகிமைப்படுத்த முடியும் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். வசனம் சொல்லுகிறது ஸ்தோத்திரம் செலுத்துகிறவன், பிதாவை மகிமைப்படுத்துகிறான். ஆகையால் உங்கள் ஜெபங்களை நிராகரிக்காமல் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி அவரை மகிமைப்படுத்துங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *