பாலகனும், குமாரனும் (The Child and The Son)

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CrUB3A2TzOo

கிறிஸ்துவுக்கு முன்பு, சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி, இயேசு மனுஷகுமாரனாய்  ஒரு பாலகனாய் பிறப்பதைப் பற்றியும், அவர் நித்திய நித்தியமாகக் காணப்படுகிற தேவகுமாரனாக கொடுக்கப்படுவதையும் குறித்து எழுதுகிறதை மேற்குறிப்பிட்ட வசனம் மூலம் பார்க்கமுடிகிறது. இயேசு மனுஷகுமாரனாகவும், அதே வேளையில் தேவகுமாரனாகவும் வெளிப்பட்டார். 

மனிதர்களுக்கு ஒரு துவக்கம் வேண்டும். ஆகையால் அவருக்கு ஒரு சரீரம் தேவைப்பட்டது. அதற்காகப் பிதாவாகிய தேவன் இயேசுவுக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினார். ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர் என்று   எபி.10:5ல் எழுதப்பட்டிருக்கிறது. அவள்தான் புருஷனை அறியாத கன்னிகையாகிய மரியாள்.  தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று லூக்கா 1:30,31 கூறுகிறது. காலம் நிறைவேறின போது, ஸ்திரீயின் வித்தாக, மரியாளின் பாலகனாக கிறிஸ்து பிறந்தார். அதைத்தான் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். அவருடைய பிறப்பு சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அவர் பிறக்கும் போதே மரிக்கும்படிக்காய் பிறந்தவர். அவர் பாலகனாகப் பிறந்து,  முப்பத்துமூன்றரை வருடம் இந்தப்பூமியில்  வாழ்ந்து, நமக்கு ஒரு மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார். இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்தச் சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள் என்று எபி. 3:1ல் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவின் வாழ்க்கையைக்  கவனித்துப் பார்த்து அவர் பூமியில் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அர்ப்பணிப்பதை   இந்தப் பண்டிகைக் காலங்களில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இயேசு தேவகுமாரனாக நமக்காகக் கொடுக்கப்பட்டவர். அவர் திரித்துவத்தில் இரண்டாவது நபர். அவர் ஆதியிலே வார்த்தையாக இருந்தவர். அவர் அல்பா, ஒமெகா, ஆதியும் அந்தமுமானவர். உலக தோற்றத்திற்கு முன்பாகவே அவர் காணப்படுகிறார். ஆகையால்தான் அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது என்று மீகா 5:2ல் எழுதப்பட்டிருக்கிறது. அவர் தேவகுமாரனாக ஒருநாளும் மரிக்க முடியாது. அவர் நீண்ட ஆயுசுள்ளவர், அவருடைய சிங்காசனம் என்றென்றெயிக்கும்  நிற்கும்.   கர்த்தத்துவம், அதாவது ஆளுகையும் ஆட்சிப்பொறுப்பும், அவர் தோளின்மேலிருக்கும், அவரே ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். உலகத்தின் அதிகாரங்கள் அத்தனையும் அவருடைய அதிகாரத்தின் கீழ்க் காணப்படும். அவர் நாமம் அதிசயமானவர்,  ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். அவரே நித்தியப் பிதாவாகிய தேவன், ஆகையால் தான் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறினார். கர்த்தருடைய பிள்ளைகளே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்காக, எனக்காகக் கொடுக்கப்பட்ட தேவகுமாரன், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் இந்தப் பண்டிகைக் காலங்களில் அதிசயமானவராய் உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட்டு, உங்களுக்கு அற்புதங்களைச் செய்து மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *