வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வெளிச்சம் (The Promised Light)

ஏசா 9:2. இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/paeKmrCyIMI

வேதாகமத்தில் எழுதப்பட்ட ஒவ்வொரு வசனங்களும், வாக்குத்தத்தங்களும், தீர்க்கதரிசனங்களும் சத்தியமானவைகள், அவைகள் ஒவ்வொன்றும் நிறைவேறியிருக்கிறது, இனிமேலும் நிறைவேறும். சுமார் எழுநூறு வருஷத்திற்கு முன்பாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் தான் மேற்குறிப்பிட்ட வசனம். இந்த வாக்குத்தத்தமான தீர்க்கதரிசனம் இயேசு பிறந்தபோது நிறைவேறியது. மத் 4 : 15,16 வசனங்கள் கூறுகிறது, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்பதாக.

இந்த உலகம் மிகப்பெரிய இருளில் இருந்தது. இருள் இருக்கும் இடத்தில் வழியை கண்டுபிடிப்பது கடினம், தடுமாறி விழும் சூழ்நிலை காணப்படும், படுகுழி நம்முடைய கால்களின் கீழ் இருந்தாலும், அதற்குள் விழும் சூழ்நிலை ஏற்படும். இப்படி இருளினால் தடுமாறிக்கொண்டிருந்த உலக ஜனங்களை மீட்டெடுக்க வெளிச்சம் தரும்படி இயேசு இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தார். யோவா 8 :12 கூறுகிறது, மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார் என்பதாக. இயேசு தான் உலகத்திற்கு ஒளி என்றும், வெளிச்சம் தரவந்தவர் என்றும், இயேசு தன்னுடைய ஊழிய நாட்களில் கூறினார். அதை தான் லூக்காவும் குறிப்பிட்டு எழுதினார். லுக் 1:78,79 கூறுகிறது, அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான் என்பதாக.

ஆண்டவர் படைத்த சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் பல நன்மைகளை தருகிறது. சூரிய வெளிச்சம் Vittamin D குறைபாடுகளை நீக்கும்; எலும்புகளுக்கு நல்லது; இரத்த அழுத்தத்தை குறைக்கும்; உடலின் பருமனை குறைக்க உதவி செய்யும். இப்படி அநேக நன்மைகள் சூரிய வெளிச்சத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். படைப்புகளின் மூலம் நாம் நன்மைகளை பெற்றுக்கொள்ளுவது சாத்தியமென்றால், படைப்பாளியிடம் இருந்து அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ளுவது எத்தனை சாத்தியம்!. நம்முடைய வாழ்விலிருக்கும் இருளை நீக்கும் வெளிச்சமாக இயேசு வந்தார். பாவ இருளை களைந்து, பரிசுத்தம் என்னும் வெளிச்சத்தை தர இயேசு வந்தார். சாப கட்டுகள் என்னும் இருளை உடைத்து, சமாதானத்தை உண்டு பண்ண இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். இன்று இயேசுவாகிய வெளிச்சத்தை சுமந்து செல்லும் பாத்திரமாக நாம் இருக்கிறோம். இருளிலிருக்கும் ஜனங்களுக்கு இயேசுவாகிய வெளிச்சத்தை பிரசங்கித்து, அவர் பிறந்த நாளை கொண்டாடுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *