ஸ்தோத்திர பலி (Offering of Praise)

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார் (சங். 50:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-wLvwCcygC8

லேவியனாகிய ஆசாப் எழுதின முதல் சங்கீதம்,   சங்கீதம் ஐம்பதாகக் காணப்படுகிறது. தாவீது ராஜா ஆசாப்பையும் அவன் குமாரர்களையும் தன்னுடைய இசைக்குழுவின் தலைவர்களாகவும் பாடகர்களாகவும் வைத்திருந்தான். அவர்கள்  சுரமண்டலங்களாலும்  தம்புருகளாலும் கைத்தாளங்களாலும் கர்த்தரை துதிக்கும் போது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களாயும் காணப்பட்டார்கள் என்று 1 நாளா. 25:1 கூறுகிறது. வேதம் அவனை  ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாப் என்றும் அழைக்கிறது.

அவன் மூலம் கர்த்தர் வசனித்துப் பேசினபோது, நீ தேவனுக்கு ஸ்தோத்திர பலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்றும், ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு  என்னுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்றும் சொல்லுகிறதைப் பார்க்கமுடிகிறது. கர்த்தர் நன்றியுள்ள இருதயங்களிலிருந்து எழும்புகிற துதி, ஸ்தோத்திரபலிகளில் அதிகப்  பிரியமுள்ளவராயிருக்கிறார். அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை இயேசுவின் மூலம் எப்போதும் அவருக்குச் செலுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, வேலைசெய்து சம்பாதிக்கப் பெலனைக்  கொடுக்கிறவர் கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக, அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் என்று உபா.  8:18 கூறுகிறது. அதுபோல தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அனுக்கிரகம் என்பதாகப் பிரசங்கி 5:19 கூறுகிறது. ஆகையால் இந்த வருடம் முழுவதும் உழைக்கவும், உழைப்பின் பிரதிபலன்களைப் புசிக்கவும் கிருபை செய்த தேவனுக்கு நன்றி பலிகளை ஏறெடுக்க மறவாதிருங்கள். ஆண்டவரிடத்தில் சுகத்தைப் பெற்ற பத்து குஷ்டரோகிகளில் ஒருவன் திரும்பி வந்து நன்றி செலுத்தின வேளையில் மற்ற ஒன்பது பேரும் எங்கே என்று இயேசு கேட்டதிலிருந்து அவர் நன்றிப் பலிகளை எதிர்பார்க்கிறார் என்பதைப் புரியமுடிகிறது. நம் உதடுகளிலிருந்து வெளிப்படுகிற ஸ்தோத்திரப் பலிகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படட்டும். இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்று கர்த்தர் வேதனைப் பட்டார். ஒருவருடத்தின் கடைசி வேளையில் காணப்படுகிற நாம், கர்த்தர் செய்த உபகாரங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து நன்றி செலுத்துகிற வேளையில், அவர் இன்னும் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துகிறவராய், உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *