வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான், அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:4,5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jd5Ia2hvUio
பிள்ளைகளை வேதம் அம்புகளுக்கு ஒப்பிடுகிறது. அம்புகள் தானாகக் கூர்மையாவதில்லை, தானாக எய்யப்படுவதுமில்லை. அவைகளைக் கவனமாக வடிவமைத்து, சரியான திசையை நோக்கி, திறமையோடு எய்தால் தான் நேராகப் பறந்து இலக்கை அடையும். போர்வீரர்கள் அதைச் சரியாகக் கையாளும் போது வெற்றி நிச்சயமாகிறது. அதுபோல பிள்ளைகளையும் நன்கு பராமரித்து, சரியான வழிகளைக் கற்றுக்கொடுத்து, அவைகளில் நடக்கப் பழக்கப்படுத்தி, அவர்களுடைய ஞானத்தைக் கூர்மையாக்கும் போது, அவர்கள் வீட்டிற்கும், சபைக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் ஆசீர்வாதமானவர்களாய் மாறுவார்கள். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று நீதி. 22:6 கூறுகிறது.
தீமோத்தேயுவைக் குறித்துப் பார்க்கும் போது, அவனுடைய தாயும், பாட்டியும் அவனுக்குச் சிறுவயதிலிருந்தே வேத வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அவன் பழைய ஏற்பாட்டுப் பிரமாணங்களில் சிறுவயதிலேயே தேறினவனாய் காணப்பட்டான். ஐனிக்கேயாள், அவனுடைய தாயாக, அவனைக் கர்த்தருக்குள் வளர்த்துவதற்கு தேவைப்பட்ட அனைத்துக் காரியங்களையும் செய்து அவனைச் சிறுவயதிலிருந்தே கூர்மைப்படுத்தினாள். அவன் டீன்ஏஜில் காணப்பட்ட போது அப்போஸ்தலனாகிய பவுலின் முதல் மிஷனரி பயணத்தின் மூலம் இயேசுகிறிஸ்துவின் சுவிஷேத்தைக் கேட்டதாகக் கருதப்படுகிறது. உடனே வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். பின்பு, அனேக வேத ரகசியங்களை அப்போஸ்தலனாகிய பவுல் அவனுக்குக் கற்றுக்கொடுத்து, அவனை இன்னும் அதிகக் கூர்மையாக்கினான். பின்னாட்களில் அப்போஸ்தலனாகிய பவுல் அவனை விசுவாசத்தில் தன்னுடைய உத்தம குமாரன் என்று அழைக்கிறதைப் பார்க்கமுடிகிறது. பவுலுடைய பிரதிநிதியாக அவனால் நிறுவப்பட்ட சபைகளுக்கு தீமோத்தேயுவை பலமுறை அனுப்பி வைத்தான். அவனுக்குள் காணப்பட்ட விசுவாசமானது மாயமற்றதாய்க் காணப்பட்டது என்றும் பவுலால் புகழப்பட்டான். ஆகையால் அவனால் எழுதப்பட்ட 2 கொரிந்தியர், பிலிப்பியர், கொலோசெயர், 1,2 தெசலோனிககேயர் மற்றும் பிலேமோன் நிருபங்களில் தீமோத்தேயுவை உடன் ஆசிரியராகக் குறிப்பிடப்படுவதைப் பார்க்கமுடிகிறது. பின்னாட்களில் எபேசு சபையின் போதகராகவும் கண்காணியாகவும் அவன் காணப்பட்டான். சிறுவயதில் கூர்மையாக்கப்பட்ட அம்பாய் காணப்பட்ட தீமோத்தேயு, பின்னாட்களில் தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்கு மிகுந்த பிரயோஜனமுள்ளவனாய் மாறினான். பவுலைப் போன்ற விசுவாசத்தில் பலவானுடைய கரங்களில் அவன் காணப்பட்டதினால், தேவனுடைய கருவியாய் மாறினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் பிள்ளைகளைச் சிறுவயதிலிருந்தே கர்த்தருக்கு ஏற்றக் காரியங்களில் கூர்மைப்படுத்தி வளருங்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளால் உங்கள் அம்பறாத்தூணி நிரப்பப்படும் போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அம்பறாத்தூணி என்பது அம்புகளைச் சேமித்து வைத்து தோளில் சுமப்பதற்குரிய ஒரு கொள்கலன். அதுபோல் உங்கள் பிள்ளைகளைக் கூர்மைப்படுத்தி, சரியான வழிகளில் நடத்தி, உங்கள் அம்பறாத்தூணியைப் பிள்ளைகளால் நிரப்பும் போது நீங்கள் ஆண்டவருடைய பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

