நீதி 1:7. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/a8hMPUW1ho8
நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதப்பட்ட முதல் நீதிமொழி தான் மேற்குறிப்பிட்ட வசனம். ஞானத்தின் ஆரம்பம் என்று கூறும்போது, இது தான் அடித்தளம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் ஜனங்களை எப்படி பார்க்கிறார், தேவன் சூழ்நிலைகளை எப்படி பார்க்கிறார், என்ற அறிவு நமக்கு இருக்குமென்றால் அது தான் தேவ ஞானம். ஒரு நபர் தன்னுடைய மனக்கவலையினிமித்தம் கவனக்குறைவால் வாகனத்திற்கு முன்பாக சாலையை கடந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாமாக இருந்தால் அந்த நபரை கண்டபடி சபித்துவிடுவோம். இருதயங்களை ஆராய்ந்து அறிகிற கர்த்தர், மனதுருக்கமுடையவர் அந்த நபரின் மனக்கவலையை பார்த்து அவருக்கு உதவி செய்யவே விருப்பமுள்ளவராக இருப்பார். அப்படி தேவன் பார்க்கும் விதத்தில் பார்ப்பதும், தேவன் செயல்படும் விதத்தில் செயல்படுவதே ஞானம்.
இந்த ஞானம் எப்படி நமக்கு உண்டாகிறது? முதல் படி அவருக்கு பயப்படுவது; அவர் மீது பயபக்தியுடன் இருப்பது. அவருக்கு பயப்படுவது என்றால் என்ன என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்? பாவத்தை வெறுத்து நீதியை நேசிப்பது தான் அவருக்கு பயந்த வாழ்க்கை வாழுவது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதனால்தான் நமக்கு எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பது கேள்வி அல்ல, மாறாக நமக்கு எவ்வளவு தேவ பயம் இருக்கிறது என்பது ஆவிக்குரிய அறிவிலும் ஆவிக்குரிய ஞானத்திலும் நாம் எவ்வளவு அதிகரிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. ஆகையால் ஆரம்பம் நமக்கு சரியாக இருக்க வேண்டும். அந்த ஆரம்பம் கர்த்தருக்கு பயப்படுவது. முதல் கோணல் முற்றும் கோணலாக இருக்க கூடாது. முதல் கோணல் சரியாக இருந்தால் முற்றும் சரியாக இருக்கும். அந்த முதல் அடியை ஒவ்வொருநாளும் சரியாக எடுத்துவையுங்கள். அந்த முதல் படி, கர்த்தருக்கு பயப்படுவதே!.
இது தான் பந்தயத்தின் தொடக்கக் கோடு. நீங்கள் அங்கு செல்லவில்லை என்றால், நீங்கள் எங்கும் செல்ல முடியாது. நாம் தேவ பயத்தை இழக்கும் நாளில், தேவனை அல்லது ஞானத்தை பற்றிய புரிதலை நம்மால் இனி பெற முடியாது. ஞானத்தில் அதிகரிப்பதற்கான ஒரே ஒரு வழி, நாம் தேவ பயத்தில் அதிகரிப்பதாகும்.
வேதாகமம் ஒரு முட்டாளை பற்றி பேசும்போது, அது படிப்பில் மோசமாக இருக்கும் ஒருவரை பற்றி பேசுவதில்லை. அது கர்த்தருக்கு பயப்படாத ஒருவரை பற்றி பேசுகிறது. பெண்களை இச்சையுடன் பார்த்துவிட்டு, அதற்காக துக்கப்படாமல், அதற்காக அழாமல் இருக்கக்கூடிய ஒரு நபர் தான் முட்டாள் இல்லையென்றால் மூடன் என்று வேதம் அழைக்கிறது. கணிதத்திலும் அறிவியலிலும் தொண்ணூறு சதவீதம் தேர்ச்சி பெற்றாலும் அவன் ஒரு முட்டாள் தான்! பொய்களை சொல்வது, அல்லது மற்ற எல்லா வகையான பாவங்களையும் செய்துவிட்டு, இதுபோன்ற விஷயங்களை பற்றி தனது இதயத்தில் கலங்காதவர் தான் தேவ பயம் இல்லாத நபர். ஞானத்தையும் போதகத்தையும் வெறுப்பவர்கள் முட்டாள்கள். தேவனுடைய பார்வையில் இருந்து விஷயங்களை பார்க்கும் புரிதல் அவர்களிடம் இல்லை.
ஆகையால் நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதப்பட்ட முதல் நீதிமொழியை சரியாக கடைபிடியுங்கள். ஞானத்தில் பெருகுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

