மத் 5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FD1cjjy6h8g
நம்முடைய வாழ்க்கையில் தீமையோடும், துன்மார்க்கத்தோடும் இருக்கும் சில நபர்களோடு பழகக் கடினமாக இருக்கும். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தோடு எளிதில் இணைந்து செல்ல முடியாதவர்கள். இவர்கள் மற்றவர்களைப் புண்படுத்திக்கொண்டே இருப்பார்கள். சட்டென்று கோபப்படுவார்கள், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள், மற்றவர்களை விரோதித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் எப்படி கையாளுவது? ஆண்டவர் சொல்லுகிறார், தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று கூறுகிறார். ஒருவன் சண்டைபோட்டு உங்கள் சட்டை என்னுடையது என்றால், உங்கள் ஜீன்ஸையும் கொடுத்துவிடுங்கள். ஒருவள் உங்களுடைய சுடிதார் என்னுடையது என்று சொன்னால், பட்டுப் புடவையையும் கொடுத்துவிடுங்கள். ஒருவன் ஒரு கிலோமீட்டர் நடக்க வற்புறுத்தினால், இரண்டு கிலோமீட்டர் அவனோடு நடந்துசெல்லுங்கள். உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார் என்று நீதி 25:21,22 கூறுகிறது.
ஒருவன் தவறு செய்யும்போது பழிவாங்கவே நம்முடைய இருதயம் துடிக்கும். ஆனால், ஆண்டவர் அவர்களையும் நேசிக்கவே நம்மை அழைக்கிறார். லோத்து ஆபிரகாமோடு இணைந்து நிற்காமல் பிரிந்துபோனான். இருந்தாலும் பின்பு ஆபிரகாம் லோத்துக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன், அவனை அணைத்துக்கொண்டான். மிரியாம் புரளி பேசினாலும் மோசே சாந்தத்துடன் இருந்தான். உங்களை அரவணைக்க முடியாதவரை, கடினமாக இருந்தாலும், தேவனுடைய பாணியில் அவரை அரவணையுங்கள்.
பவுலைப் பாருங்கள். அவன் எவ்வளவு அழகாக ஒநேசிமுவையும் பிலமோனையும் கையாண்ட விதத்தை. ஒநேசிமு ஓடிப்போனாலும் பிலமோனோடு ஒப்புரவாக்கினான். இப்படி நாம் எல்லாரோடும் ஒப்புரவாகிப் போவதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. ரூத்தின் மாமியார் நச்சரிக்கிற மாமியாரல்ல. என்னவானாலும் நான் உங்களை விட்டுப் பிரிவதில்லை என்றே ரூத் கூறினாள். யோனத்தான் உத்தமத்தின் சிகரம் என்றே கூறலாம். இருந்தாலும் மிகக் கடினமான சுபாவத்திலிருந்த தனது தந்தை சவுலோடு இணைந்து போரில் இறந்தான்.
உங்களைக் குத்திக்கொண்டே இருப்பவர்களை உங்களைப்போலவே நேசியுங்கள். யாவரோடும் சமாதானமாயிருக்கவும் நாடுங்கள் என்று எபி 12:14 கூறுகிறது. ஆகையால் கடினமான நபர்கள் யாராக இருந்தாலும், உங்களைப் புறம் தள்ளிய நண்பர்களையும், உங்கள் இரகசியத்தைக் காக்காமல் மற்றவர்களிடம் ஊதித் தள்ளிய உறவினர்களையும், காயப்படுத்தியது விசுவாசிகளாகவோ உடன் ஊழியர்களாகவோ இருந்தாலும், அவர்களோடு சமாதானமாயிருங்கள். அப்பொழுது நீங்களும் புத்திக்கெட்டாத தேவ சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

