உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்(சங்.91:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_deGrydKd8o
தேவனுடைய ஜனங்களால் அதிகமாய் பயன்படுத்தப்படுகிற வேத பகுதிகளில் சங்கீதம் 91-ம் காணப்படுகிறது. குறிப்பாகப் பிரயாணங்கள் செய்வதற்கு முன்பு, கர்த்தருடைய பாதுகாப்புக்காக அதிகமாக இந்தச் சங்கீதத்தை வாசித்து, ஜெபிப்பது வழக்கம். இது யாரால் எழுதப்பட்டது என்பதை அறியமுடியவில்லை. சிலர் மோசே இந்ந சங்கீதத்தை எழுதியிருக்கக் கூடும் என்பதாகச் சொல்லுகிறார்கள், அதற்குக் காரணம் அவன் எழுதிய 90வது சங்கீதத்தின் முதல் வசனம், ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர் என்று பாதுகாப்பைக் குறித்துத் துவங்குவதினால் அவ்வாறு கூறுகிறார்கள். நாற்பது வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் எவ்வாறு பாதுகாப்பாய் வனாந்தரத்தில் காணப்பட்டார் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அதுபோல, இந்த சங்கீதமானது 27 மற்றும் 31வது சங்கீதத்தின் சாயலில் காணப்படுவதினால் இதை ஆக்கியோன் தாவீதாகவும் காணப்படக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
கர்த்தருடைய நாமங்களில் ஒன்று சர்வ வல்லவர் என்ற எல்-ஷடாய் என்பதாய் காணப்படுகிறது. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்று முதல்முதலாக சர்வ வல்லவர் என்ற தன்னுடைய நாமத்தை வெளிப்படுத்தினார். அதற்கு All-Sufficient One, அதாவது எல்லாவற்றிற்கும் போதுமானவர் என்பது ஓர் அர்த்தமாகும். இன்னொன்று தாயைப் போன்ற மார்புகளையுடைய தகப்பன், அதாவது அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், ஆறுதல்படுத்துகிறவர், மனதுருக்கமுள்ளவர் என்பதாகக் காணப்படுகிறது. சர்வ வல்லவருடைய நிழல் என்பது அவருடைய பிள்ளைகளுக்கு அவர் வைத்திருக்கிற பாதுகாப்பைக் குறிக்கிறது. அவரை அண்டிக்கொண்டு, அவருடைய நிழலுக்குள் நீங்கள் காணப்படும் போது, அவர் உங்களுக்கு அடைக்கலமாய், கோட்டையாய் காணப்படுவார். அப்போது சத்துருவின் கண்ணிகள், பாழாக்கும் கொள்ளை நோய்கள் ஒன்றும் உங்களை அணுகாது. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் நீங்கள் பயப்படாதிருப்பீர்கள். உங்கள் பக்கத்தில் ஆயிரம்பேரும், வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உங்களைத் தொடாது. ஒரு பொல்லாப்பும் உங்களுக்கு நேரிடாமலும், வாதைகள் உங்கள் கூடாரத்தை அணுகாமலும் காத்துக் கொள்வார். உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும் படிக்குத் தம்முடைய தூதர்களுக்குக் கர்த்தர் கட்டளையிடுவார்.
நீங்கள் உங்கள் வாஞ்சையையும், அன்பையும் கர்த்தர் பேரில் வைத்திருப்பதினால் அவர் உங்களை விடுவித்து, உங்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். நீங்கள் அவரை நோக்கி ஜெபத்திலே கூப்பிடும் போது, அவர் உங்களுக்கு மறு உத்தரவு அருளிச் செய்து, உங்களைத் தப்புவித்து, கனப்படுத்தி, திருப்தியாக்கி மேன்மைப் படுத்துவார். ஆகையால், எப்பொழுதும் சர்வ வல்லவருடைய நிழலில், அவருடைய பிரசன்னத்தில் காணப்படுவதை உறுதிப்படுத்துங்கள். ஒருநாளும் இஸ்ரவேல் ஜனங்களைப் போல முட்செடியின் நிழலை நாடாதிருங்கள், யோனாவைப் போல ஆமணக்குச் செடியின் நிழலில் திருப்திப்பட்டு அதன்கீழ் காணப்படுவதை விரும்பாதிருங்கள். நீங்கள் சர்வ வல்லவருடைய நிழலில் காணப்படும் போது, ஒரு தீங்கும் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தொடுவதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

