நீதிமானாகிய யோசேப்பு

இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான் (மததேயு 1:18,19)

இயேசு கிறிஸ்து இரட்சகராகப் பிறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவருடைய பிறப்பைப் பற்றி இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. உலகப்பிரகாரமாய் அவருடைய தாயாய் காணப்படபோகிற  மரியாளுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக (லூக். 1:31). மரியாள் இதோ நான் ஆண்டவருக்கு அடிமை,  உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது என்று தன்னை அர்ப்பணித்தாள்.  ஆகையால் அவள் ஸ்திரீகளுக்குள் பாக்கியவதியாக மாறினாள். அதன் பின்பு அவளுக்குப் புருஷனாக நியமிக்கப்பட்டிருந்த யோசேப்புக்கு மரியாள் கர்ப்பவதி என்றும் அவள் இயேசுவை பெற்றெடுக்கப் போகிறாள் என்றும் அறிவிக்கப்பட்டது.  யோசேப்பிற்கு அந்தச் செய்தி அதிர்ச்சியாகக் காணப்பட்டது. இஸ்ரவேலிலே திருமணத்திற்காக ஒரு புருஷனும் கன்னிகையும் நியமிக்கப்பட்ட உடனே, அது திருமணத்திற்கு இணையாக சட்டப்பூர்வமாகக் கருதப்படும். ஆனால் இவர்கள் திருமணத்தில் கூடிவரும் முன்னே கர்ப்பவதி என்ற செய்தி யோசேப்பை அதிர்ச்சியடையும்படி செய்தது.

யோசேப்பு நீதிமானாய் காணப்பட்டதினால் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளை அவமானப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆகையால் இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவர்கள் மற்றவர்களை அவமானப்படுத்த விரும்பமாட்டார்கள். அநீதி எல்லாம் பாவம் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய சுயநீதிகள் எல்லாம் அழுக்கான கந்தைக் குப்பையாய் காணப்படுகிறது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக நம்மை இரட்சிக்கும்படிக்குப் பிறந்த ஆண்டவர் பேரில் நாம் வைக்கும் விசுவாசம் நம்மை நீதிமான்களாய் மாற்றும் (ரோமர் 5:1). பூமியில் காணப்படுகிற ஒவ்வொருவரும் ஆண்டவரின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். ஆகையால் யாரையாகிலும் அவமானப்படுத்தினால் அவர்களைச் சிருஷ்டித்தவரை அவமானப்படுத்துகிறோம். யோசேப்பைப் போல மற்றவர்களை அவமானப்படுத்தாத ஜீவியம் செய்ய இந்த நாட்களில் கர்த்தர் நமக்கு உதவிசெய்வாராக. 

யோசேப்பு இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ளப் பயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.  யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். நீதிமானாகிய யோசேப்பு கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிகிறவானாயும் காணப்பட்டான். தேவதூதனால் முன் சொல்லப்பட்டபடியே அவருக்கு இயேசு என்ற பெயரையும் போட்டான். நீதிக்குரிய ஜீவியம் செய்கிறவர்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவார்கள். கர்த்தர் செய்யச் சொல்லுவதை அப்படியே செய்வார்கள். ஆபிராமைப் பார்த்து கர்த்தர் நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று சொன்னவுடன் அவன் கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடு புறப்பட்டுச் சென்றான். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், கர்த்தர் அதை நீதியாய் எண்ணினார். இயேசுவின் பிறப்பைக் குறித்து நினைவு கூருகிற இந்த நாட்களில், நீதிமானாகிய யோசேப்பைப் போல நீதிக்குரிய ஜீவியம் செய்ய நம்மையும் அர்ப்பணம் செய்வோமா?

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *