கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி, ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங்கீதம் 75:6,7).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oUWxuDtTL1w
ஒருவனைத் தாழ்த்துவதும், உயர்த்துவதும் கர்த்தர். அவர் கழுதையைத் தேடித்திரிந்தவனை இராஜாவாகவும், ஆட்டிடையனை அரசனாகவும், அடிமையை ராணியாகவும் உயர்த்துகிறவர். அதுபோல, அரியணையில் அமர்ந்திருந்த நேபுகாத்நேச்சாரை மிருகத்தைப் போலப் புல்லை தின்னச் செய்து தாழ்த்தியவர், எகிப்தின் கடவுளைப் போல கருதப்பட்ட பார்வோனை பத்து வாதைகளினால் வாதித்து மண்டியிடும் படிக்குச் செய்தவர், அதிகாரம் படைத்த ஆமானை அவன் செய்த தூக்கு மரத்திலே தூக்கிலிட்டு தாழ்த்தினவர். அவரால் யாரையும் உயர்த்தவும் தாழ்த்தவும் கூடும். கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார், துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார் என்று சங். 147:6 கூறுகிறது. மரியாள் கர்த்தரில் களிகூர்ந்து, அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார், இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று பாடினாள்.
பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மொர்தெகாய் என்பவன், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்ட அடிமைகளில் ஒருவனாயிருந்தான். ஆசீர்வாதமாய் வாழ்ந்துகொண்டிருந்தவன் தேசத்தின் தலைவர்களின் பாவங்களின் நிமித்தம் அடிமையாய் சிறைபிடிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டான். பாபிலோனிய ராஜாவின் நாட்களுக்குப் பின்பு, பெர்சிய ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனை வாசலில் ஊழியக்காரனாய் தாழ்ந்த நிலையில் காணப்பட்டான். அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும், தேரேசும் ராஜாவின் மேல் கைபோடப்பார்த்த செய்தியை ராஜாவுக்கு அறிவித்தான். ஆகையால் பின்னாட்களில் கர்த்தர் அவனை உயர்த்த சித்தம் கொண்டார். யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான் என்று எஸ்தர் 10:3 கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை இப்போது நீங்கள் தாழ்ந்த நிலையில் காணப்படக்கூடும். உங்களுடைய தாழ்ந்த நிலையிலும் உண்மையும், உத்தமுமாய் ஜீவியுங்கள். உங்கள் உயர்வு கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து வராது என்பதை அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் பலவான்களை ஆசனத்திலிருந்து தள்ளி தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறவர். ஏற்ற வேளையில் அவர் உங்களை உயர்த்தும் படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள் நீங்கள் அடங்கியிருக்கும் போது கர்த்தர் உங்களை உயர்த்துவார். நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

