இஸ்ரவேலின் இரதமும் குதிரைவீரரும் (The chariot and horseman of Israel)

அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான், அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய  யோவாஸ் அவனிடத்துக்குப்போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே,  இஸ்ரவேலுக்கு  இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான் (2 இராஜா. 13:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jggaznAEKlU

இஸ்ரவேலில் தோன்றின ராஜாக்களில் யோவாசும் ஒருவன். அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவரை விட்டு வழிவிலகச் செய்த   யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகள் எல்லாவற்றின் படியும் நடந்தான். ஆகிலும்  எலிசா தீர்க்கதரிசி மரணமடையும் வேளை வந்த போது   யோவாஸ் அவனிடத்துக்குப்போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். இதற்கு முன்பு எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போன போது,  எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான் என்று 2 இராஜாக்கள் 2:11,12 கூறுகிறது. அங்கே சீஷனாய் காணப்பட்ட எலிசா,  தன் குருவாய் காணப்பட்ட நல்ல தீர்க்கதரிசியான எலியாவிற்காய் புலம்பினான். ஆனால், இங்கே யோவாஸ் என்ற பொல்லாத  ராஜா,  கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலிசாவிற்காக புலம்பினான். அதற்குக் காரணம், எலிசா இஸ்ரவேலில் ஏற்படுத்திய ஒரு தாக்கமாய் காணப்படுகிறது, அவனின் பரிசுத்தமான மாதிரியின் ஜீவியமாய் காணப்படுகிறது.   யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டாலும், அவனுக்கு இராணுவம் காணப்பட்டாலும், இஸ்ரவேல் தேசத்திற்கும், அதன் குடிகளுக்கும் பாதுகாப்பாக, இரதமும் குதிரைவீரருமாய் காணப்பட்டவன் எலிசா என்பதை அவன அறிக்கையிடுகிறதைப் பார்க்கமுடிகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையானது, விசுவாசிகள் நடுவில் மாத்திரம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதாய் காணப்படக்கூடாது, புறஜாதிகள் நடுவிலும், சுவிஷேசத்தின் எதிரிகளின் நடுவிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதாய் காணப்பட வேண்டும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் நடுவிலும், வேலை பார்க்கிற இடங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கர்த்தருடைய வருகை தாமதிக்கும் என்றால், நாம் உலகத்தை விட்டுப் பிரியும் வேளை வரும் போது, நல்ல மாதிரியை விட்டுச் செல்லுகிறவர்களாய் காணப்பட வேண்டும். ஆபேல் மரித்தும் இன்னும் பேசுகிறவனாய் காணப்படுவதைப் போல, நீங்கள் விட்டுச் செல்லுகிற அடிச்சுவடுகளைக் குறித்து அனேகர் பேச வேண்டும். அதுபோல, தேசங்கள் அதின் குடிகளுடைய பாதுகாப்பு நீங்களாய் காணப்படுகிறீர்கள். ஆகையால் தான் கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட நீங்கள் உங்களைத் தாழ்த்தி ஜெபிக்கும் போது, தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.

இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும் சமாரியர்களிடம் எழுப்புதலைக்  கொண்டுவந்தது. கானானிய ஸ்திரீயின் மகளை சுகப்படுத்திய வேளையில் தீரு சீதோன் என்ற புறஜாதிகளின் பகுதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. யோசேப்பின் ஞானமும், அறிவும் எகிப்தியர்கள் நடுவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தானியேலின் உண்மையும், உத்தமும், ஜெப ஜீவியமும் பாபிலோனிய, மேதிய, பெர்சிய நாடுகளில் காணப்பட்ட ராஜாக்கள், ஜனங்கள் நடுவில்  புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அடிமையாய் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, சீரிய ராணுவத் தளபதியாய் காணப்பட்ட நாகமானின் சரீரத்திலும், வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக் காரணமாயிருந்தாள்.  அதுபோல அடிமையாய் காணப்பட்ட எஸ்தர்,   அகாஸ்வேரு ராஜாவின் ராணியாகி பெரிய தாக்கத்தை  பெர்சிய சாம்ராஜ்யத்தில் ஏற்படுத்தினாள். அப்போஸ்தலனாகிய  பவுல் சுவிஷேசத்தைப் புறஜாதிகளின் நாடுகளில் கொண்டு சென்று அங்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினான்.

தேவ ஜனங்கள், சகல ஜனங்களும் வாசித்தறிகிற கர்த்தருடைய நிருபங்களாய் காணப்படுகிறீர்கள். நீங்கள் பூமிக்கு உப்பாய், உலகத்திற்கு வெளிச்சமாய் வாழ்ந்து, கிறிஸ்துவின் வாசனையை வீசி, இயேசுவை பிரதிபலிக்கும் போது நீங்கள் மரித்தும் பேசுவீர்கள். உங்கள் வெளிச்சத்தில் நடக்க அனேகர் மனதாயிருப்பார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *