உங்கள் உலர்ந்த வாழ்வு மீண்டும் துளிர்க்கும் (Your dry life will sprout again)

அப்பொழுது அவர் என்னைநோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று, நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள் (எசே. 37:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zaB-fPdAxo4

எசேக்கியேல் தீர்க்கதரிசியைக் கர்த்தர் ஆவிக்குள்ளாக்கி உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கின் நடுவில் கொண்டுபோய் நிறுத்தினார். அந்த எலும்புகள் மகா திரளானதும், மிகவும் உலர்ந்ததுமாய் காணப்பட்டது. கர்த்தர் எசேக்கியேலை நோக்கி இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார். இந்த எலும்புகள் இஸ்ரவேல்  வம்சத்தாரைக்  குறிக்கிறது என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. பாபிலோனில் அடிமைகளாய் காணப்பட்ட  யூதாவின் குடிகளையும், இவர்களுக்கு முன்பு சுமார்  நூற்றிஐம்பது வருடங்களுக்கு முன்பாக அசீரியர்களால்   அடிமையாக்கப்பட்ட இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்களையும் குறிக்கிறது, அதாவது முழு இஸ்ரவேல் தேசத்தின் ஜனங்களையும் குறிக்கிறது. இப்பொழுது அவர்கள் அனைவரும்   இதோ,   எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று, நாங்கள் அறுப்புண்டுபோகிறோம், எங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை, நாங்கள் அடிமைகளாகவே வாழ்ந்து   நாட்களை முடிக்கவேண்டியது தான் என்று நினைத்துக் கலங்கிக் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்களை விடுவித்துத் திரும்பவும் இஸ்ரவேல் தேசத்தில் கொண்டு வந்து நாட்டி அவர்களை மீண்டும் துளிர்க்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள், நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள், இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை நீங்களும் இஸ்ரவேல்  ஜனங்களுடைய நிலையில் காணப்படலாம். நம்முடைய தேவன் விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் எடுத்து நிலை நிறுத்தினவர், அதுபோல அவர் உங்களையும் மறுபடியும் நிலை நிறுத்துவார். இந்தக் குறிப்பிட்ட கடன் பிரச்சனையிலிருந்து விடுபடமுடியுமா, வியாதியிலிருந்து விடுதலை கிடைக்குமா, தொடர் தோல்விகளிலிருந்து வெற்றிக் கிடைக்குமா, காத்திருப்புகள் கைக்கூடிவருமா, என்று பல கேள்விகள் உங்களில் காணப்படக் கூடும். தேவன் உலர்ந்த எலும்புகளுக்குள் ஆவியை அனுப்பி உயிர்பெறச் செய்தவர், ஆரோனுடைய உலர்ந்த கோலை துளிர்க்கச் செய்தவர், உங்கள் வாழ்க்கையையும் மறுபடியும் உயிர்ப்பிப்பது அவருக்கு  இலேசான காரியம். ஆகையால் விசுவாசத்தில் குன்றிப்போய்  விடாதிருங்கள். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே உன்னை மறுபடியும் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய் என்று வாக்குக் கொடுத்தவர் உங்கள் ஒவ்வொருவரையும் மறுபடியும் கட்டி வாழவைப்பார். எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளோடு காணப்பட்ட ரூத்தின் வாழ்க்கையை  அழகாகக் கட்டி எழுப்பின கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்வையும் கட்டி மறுபடியும் எழுப்புவத உறுதி. ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *