அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்த படியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2:7.
மரியாளுக்கு பிரசவக்காலம் நெருங்கின வேளையில் உலகமெங்கும் முதலாம் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். இது தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய்க் கூட காணப்படுகிறது. இயேசுவின் பிறப்பிற்கு 500 வருஷங்களுக்கு முன்பு மீகா தீர்க்கத்தரிசி, எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார் (மீகா 5:2) என்று கூறினார். அப்பத்தின் வீடு என்று அர்த்தம் கொள்ளும் பெத்லகேமிலிருந்து ஜீவ அப்பமாகிய இயேசு பிறக்கவேண்டும் என்பது தேவ திட்டம். அதுபோல தாவீது பெத்லகேமியனாய் காணப்பட்டதினால், தாவீதின் குமாரனான இயேசுவும் பெத்லகேமிலிருந்து பிறக்கவேண்டியதாய் காணப்பட்டது. நாசரேத்தூரிலிருந்து பெத்லகேம் செல்ல சுமார் 90 மைல்கள் தூரம் கடினமான பாதைகளில் கடந்துசெல்ல வேண்டும். யோசேப்பும், மரியாளும் சிலநாட்கள் பிரயாணம் செய்து, பெத்லகேம் வந்தவுடன் அவளுக்கு பிரசவக்காலம் வந்தது.
சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. பல கதவுகளை யோசேப்பு தட்டியிருக்கக் கூடும். ஆனால் ஒருவாசலும் திறக்கவில்லை. திறந்தவர்களும் இடமில்லை என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்கள். ஆகையால் தொழுவத்தின் முன்னணையைத் தெரிந்துகொண்டு, அங்கே தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். தேவாதி தேவனுக்குச் சத்திரத்தில் இடமில்லை, முன்னணை மட்டும் நமக்காகத் தன்னை தாழ்த்தினார்.
கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் உள்ளத்தில் இன்று இயேசுவுக்கு இடமுண்டா? உலகத்தில் இன்று கொண்டாட்டங்கள் உண்டு, களியாட்டங்கள் உண்டு, கேளிக்கைகள் உண்டு, குடில்கள் உண்டு, அலங்காரங்கள் உண்டு, ஆனால் இருதயங்களில் இயேசுவுக்கு இடமில்லை. குடும்பங்களில் இயேசுவுக்கு இடமில்லை. சபைகளில் இயேசுவுக்கு இடமில்லை. நம்முடைய இருதயங்களாகிய சத்திரம் அனேக உலகக் காரியங்களால் நிரம்பியிருக்கிறது. உலகம், மாமிசம், பிசாசுக்கு இடங்கொடுத்து கிறிஸ்துவை புறக்கணித்துவிட்டோம். கிறிஸ்துவுக்கு இடமில்லாத கிறிஸ்மஸ் அர்த்தமில்லாதது. ஓவ்வொரு வருடங்களும் பண்டிகைக் காலங்கள் திரும்ப, திரும்ப வருகிறது, ஏன்? கதவைத் தட்டுகிற ஆண்டவருடைய சத்தத்தை நாம் கேட்கவேண்டும். என் புறாவே, என் உத்தமியே கதவைத்திற என்று சொல்லுகிற நேசரின் சத்தம் நம் இருதயங்களில் தொனிக்கவேண்டும். சத்திரக்காரர்களாய் (Innkeepers) காணப்படுகிற நாம் நம்முடைய இருதயக்கதவுகளை திறக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். இனிக் காலம் செல்லாது. நம்முடைய கடைசி சுவாசத்தை எப்போது விடப்போகிறோம் என்பது தெரியாது, அதுபோல கர்த்தருடைய வருகையின் வேளையையும் நாம் அறியோம். ஆகையால் இன்றே நாம் நம்முடைய இருதயக்கதவுகளைக் திறந்து என்னில் பிரவேசியும். என்னை இரட்சியும், என்னை ஆளுகை செய்யும் என்று நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் எல்லா ஆசீர்வாதங்களைத் தந்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar