கொலோசெயர் 3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
ஆவியானவர் அப். பவுல் மூலமாக கொலோசிய சபைக்கு எழுதும்போது நன்றியுள்ள இருதயமுடையவர்களாய் இருங்கள் என்று எழுதிவைத்திருக்கிறதை பார்க்கிறோம்.
தாவீது எப்பொழுதும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறவனாக காணப்பட்டான். சவுல் தாவீதை அளிக்கும்படி வகைதேடினான். ஆண்டவர் சவுல் மற்றும் அவனுடைய பகைஞர் எல்லாரிடமிருந்தும் அவனை காத்து வழிநடத்தினார். பின்னாட்களில் சவுல் மரித்துப்போன பின்பு தாவீது நன்றி நிறைந்த இதயத்தோடு ஒரு வார்த்தை சொன்னான் “அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார். இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன் (2 சாம் 22 : 49 – 50 ).
தானியேலும் நன்றி நிறைந்த இதயமுள்ளவனாக காணப்பட்டான். நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்திற்கு யாராலும் விளக்கம் கூற முடியவில்லை. அங்கிருந்த சாத்திரிகள், ஜோசியர்கள், சூனியக்காரர்கள் யாராலும் விளக்கம் கூற முடியவில்லை. ஆனால் ஆண்டவர் தானியேலுக்கு சொப்பனத்த்திற்கு அர்த்தம் சொல்லும் ஞானத்தை தந்தார். இதினிமித்தம் அவன் நன்றியோடு அவனுக்கு கர்த்தர் கொடுத்த ஞானத்திற்காக அவன் சொன்னான் என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால் உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான் (தானி 2 : 23 ).
இயேசுவிடம் பத்து குஷ்டரோகிகள் வந்து சுகத்திற்காக வேண்டிக்கொண்டார்கள். பத்து பேரும் அற்புதத்தை பெற்றுக்கொண்டார்கள். பத்து பேரும் சுகமடைந்தார்கள். ஆனால் ஒரே ஒருவன் மாத்திரம் தான் திரும்ப வந்து அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். மீதி ஒன்பது பேர் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்காமல் நன்றியில்லாதவர்களாய் போய்விட்டார்கள். திரும்பி வந்து நன்றி சொன்னவனை பார்த்து இயேசு வேதனையோடு கேட்டார் சுகத்தை பெற்றுக்கொண்டது பத்து பேறல்லவா; மீதி ஒன்பது பேர் எங்கே என்று.
தேவஜனமே கர்த்தர் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கிறார். எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது. நோயிலிருந்து விடுதலை கொடுத்தார், எதிர் பாராத விபத்துகளிலிருந்து பாதுகாத்தார், சந்துருவின் கண்ணிகளில் விலக்கி காத்தார், திருமண காரியங்களை நடத்தி கொடுத்தார், வேலை பறிபோன சூழ்நிலையிலும் கர்த்தர் ஆதரவாக இருந்தார், நல்ல குழந்தை பாக்கியத்தை கொடுத்தார், வேலையில் உயர்த்தி வைத்தார், கடன் பிரச்சனையெல்லாம் மாற்றினார், சமாதானத்தை தந்தார், சந்தோசத்தை கொடுத்தார், குழந்தைகளின் வாழ்க்கையை அவர் பொறுப்பெடுத்தார், ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதித்தார், எல்லாவற்றிற்கும் மேலாக ரட்சிப்பை கொடுத்தார், மீட்டெடுத்தார், மன்னித்தார், நீடிய பொறுமையுள்ளவராக இருந்தார், இறக்கமுள்ளவராக, மனதுருக்கமுள்ளவராக, கிருபை நிறைந்தவராக, மன்னிக்கிறவராக, நண்பனாக, தோழனாக, தகப்பனாக, தேவாதி தேவனாக, ராஜாதி ராஜாவாக கண்ணின் மணி போல பாதுகாத்து நடத்தினாரே. அந்த நல்ல தேவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.
Bro. Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org