சொல் தவறாதிருங்கள் (Keep your word)

ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக்கடவன்  (எண். 30:2).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EYWotXYuirQ

கர்த்தருடைய பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளில் தவறாமல் காணப்படுங்கள். சொல் தவறாமல் காணப்படுகிறவர்களை வேதம் பூரணப் புருஷர்கள் (Perfect man) என்று அழைக்கிறது. நாம் சொல்லுகிற வார்த்தைகளில் நஷ்டம் ஏற்பட்டால் கூட அதில் தவறாமல் காணப்பட வேண்டும் என்று சங். 15:4 கூறுகிறது. ஆண்டவர் அவருடைய நாமங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தையை மகிமைப் படுத்தியிருக்கிறார், அவர் வார்த்தையில் உண்மையுள்ள தேவன். அனேக வேளைகளில் நாம் சொல்லுகிற வார்த்தைகளைக்  கடைப்பிடிப்பதில்லை, சாக்குப் போக்குச் சொல்லித் தப்பிவிடுகிறோம். ஆண்டவர் சொன்ன உவமையில், ஒருவன் பெரியவிருந்தை ஆயத்தம் பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும்  போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாகப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். இவர்கள் எல்லோரும் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள், வருகிறோம் என்று வாக்குக் கொடுத்தவர்கள். ஆனால் விருந்து வேளை வந்த போது, போக்குச் சொல்லத் துவங்கிவிட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் இப்படிப்பட்டவர்களாய் காணப்படலாகாது. 

இந்நாட்களில் திருமணங்களில் தேவ சமூகத்தில் நின்று கொடுக்கிற வாக்குகளைக் கூட போக்குச் சொல்லி விட்டுவிட்டுப் பிரிகிறவர்கள் உண்டு. ஆலயத்திற்கு வருகிறோம் என்று சொல்லியும் வேளை வரும் போது சத்துருவுக்கு இடம் கொடுத்துப் பின்வாங்குகிறவர்கள் உண்டு.  குறிப்பிட்ட நாட்களில் திரும்பத் தருகிறோம் என்று வாக்குக் கொடுத்து கடன் வாங்கி, திரும்பக் கொடுக்காதவர்கள் காணப்படுகிறார்கள். ஏழ்மையில் காணப்படும் போது, ஆண்டவர் எனக்கு நல்ல வேலையைக் கொடுத்தால், அவருக்காக அனேகக் காரியங்களைச் செய்வேன் என்று சொன்னவர்கள், கர்த்தர் உயர்த்திய பின்பு மறந்து போய்விடுகிறார்கள். இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான், உண்மையுள்ளவர்கள் மனுப்புத்திரரில்  குறைந்திருக்கிறார்கள் என்று சங்கீதக்காரன் சங்.12:1ல் கூறியதைப் போல, புறஜாதிகள் வாக்குகளில் தவறுவது போல, கர்த்தரை அறிந்த பக்தியுடையவர்கள் கூட காணப்படுகிறார்கள். நீங்கள் உங்கள் வார்த்தைகளில் உண்மையில்லாமல் சொல் தவறுகிறவர்களாய்  காணப்பட்டால், சத்துருவுக்கு விரோதமாய் நீங்கள் ஜெபிக்கும் போது கூட உங்கள் வார்த்தைகளில் வல்லமையில்லாமல் போய்விடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் கொடுக்கும் போது, அதைத் தீவிரமாய் எடுத்து நிறைவேற்றுகிறவர்களாய் காணப்படுங்கள். அப்போது கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் தொடரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *