சிறுமந்தை(Little flock)

லுக் 12:32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/U7DrOt2yknI

இந்த உலகில் வல்லரசு நாடுகள் இருக்கின்றன. சக்திவாய்ந்த ஜனங்கள் என்று அறியப்படுபவர்களும் உண்டு, பணக்கார குடும்பம் என்று அழைக்கப்படுபவர்களும் உண்டு. ஆனால், இவர்களுக்கெல்லாம் ராஜ்யத்தைக் கொடுக்காமல், தேவன் சிறு மந்தையாகிய உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய ராஜ்ஜியம் என்பது சிறிய சிறிய காரியத்தில் ஆரம்பித்து அது பெரியதாய் வளருகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இயேசு சொன்னார், பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார் (மத் 13:31,32). அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? என்று சகரியா 4:10 கூறுகிறது. தங்களது தொழில்கள், வியாபாரங்கள் பிரமாண்டமாகத் துவங்கவேண்டும் என்பதே அநேகருடைய விருப்பமாய்க் காணப்படுகிறது. ஆனால், தேவனுடைய துவக்கம் பிரமாண்டமானதாக இல்லாவிட்டாலும், முடிவு சம்பூரணமாய் இருக்கும்.

இயேசுவின் பிறப்பும் கூட சிறியதாகவே சித்தரிக்கப்படுகிறது. ஏசா 11:1 கூறுகிறது, ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் என்பதாக. மீகா 5:2 கூறுகிறது, எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது என்பதாக. ஏசா 41:14 கூறுகிறது, யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார் என்பதாக. இந்த வசனங்களையெல்லாம் பாருங்கள் சிறிய காரியம்தான் பெரியதாய் வளருகிறது.

சிறுமந்தையாகிய உங்களைக் கொண்டும் கர்த்தர் பெரிய காரியத்தைச் செய்வார். கடுகு விதையளவுள்ள வசனமாக இருந்தாலும், ஆத்துமாக்களுடைய இருதயத்தில் விதைக்கப் பிரயாசப்படுங்கள். பின்னாட்களில் அது பெரிய ஆலமரமாக வளரும். மோசே கையிலிருந்தது சிறிய கோல்தான், அதைக்கொண்டு எகிப்திய சேனையை கலங்கடித்தான். சிம்சோன் கையிலிருந்தது ஒரு தாடையெலும்புதான், அதைக்கொண்டு பெலிஸ்தியரை முறியடித்தான். தாவீதின் கையிலிருந்தது ஒரு கவண் தான், அதைக்கொண்டு மாமிசமலையாகிய கோலியாத்தை வீழ்த்தினான். இயேசுவின் கையில் ஐந்தப்பம் இரண்டு மீன்கள்தான் இருந்தது. அதைக்கொண்டு திரளான ஜனங்களைப் போஷித்தார். சிறியவன்தான் ஆயிரமாவான்.

ஆகையால் சிறுமந்தை என்றழைக்கப்படும் நீங்கள் தான் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் சிறுமந்தையாக இருந்தாலும், உங்கள் மனப்பான்மை ராஜரீகமுள்ளதாய் இருக்கட்டும். தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது என்பதை மறந்துபோய்விடாதிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *