தேவன் வாசம் பண்ணும் இடம் (The place where God dwells)

உபா 12 : 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய். … சந்தோஷமாயிருங்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6VHHja1Fv5U

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் வாசம் பண்ணும்படி இடத்தை தெரிந்துகொள்ளும்படி கர்த்தர் சொல்லுகிறார். இதே அதிகாரம் 11-வது வசனம், “உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்” என்பதாகவும், 13-வது வசனம், “கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்பதாகவும், 18-வது வசனம், “உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானம்” என்பதாகவும் இடத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் புதிய ஏற்பாட்டில் வாழும் காலத்தில் நமக்குக் கிடைத்த சிலாக்கியம் நாம் எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளலாம். யோவா 4:21 கூறுகிறது, “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது” என்பதாக. மத் 18:20-ல் இயேசு சொன்னார், “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்பதாக.

ஆதி அப்போஸ்தலர்கள் ஆற்றோரத்தில் இருந்தபோதும், கடற்கரையில் இருந்தபோதும், சிறைச்சாலையில் இருந்தபோதும், வீடுகளிலிருந்தபோதும், தேவப்பிரசன்னம் அவர்களை நிறைத்தது. இன்றைக்கு அநேகர் இடங்களை நாடி ஓடுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். தேவ ஜனங்களே, கிறிஸ்தவர்களுக்குப் புனித ஸ்தலம் என்று ஒரு இடமும் கிடையாது. இஸ்ரவேல் தான் புனித ஸ்தலம் என்றும், குறிப்பிட்ட சபை மாத்திரம் தான் தேவன் வாசஸ்தலம் பண்ணும் இடம் என்றும் சொல்லக்கூடாது. இன்று ஆண்டவர் இடங்களை அல்ல, ஜனங்களையே பார்க்கிறார். இரண்டோ அல்லது மூன்று பேரோ அவருடைய நாமத்தில் கூடியிருந்தால், அங்கே அவர் வாசம் செய்கிறார். அவர் துதிகளின் நடுவில் வாசம் செய்கிறவர், அவர் மனிதர்கள் மத்தியில் வாசம் செய்கிறவர். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார் என்று அப் 7:48 கூறுகிறது . ஆகையால் பிரமாண்டமான கட்டிடங்களில் இயேசு வாசம் செய்வார் என்றும், அலங்கரிக்கப்பட்ட வர்ணம் தீட்டப்பட்ட இடத்தில்தான் இயேசு வாசம் செய்வார் என்றும் நினைத்து ஏமாந்துபோகாதிருங்கள். இயேசு எங்கும் இருப்பவர். ஒரே நேரத்தில் எல்லா இடங்களையும் நிரப்பத்தக்க ஆற்றல் உடையவர். இன்று தேவன் வாசம் செய்ய இடங்களை அல்ல, மனிதர்களுடைய இதயத்தையே நோக்கிப் பார்க்கிறார். அவர் வாசம் செய்ய உங்கள் இதயத்தை அவருக்குத் திறந்து கொடுப்பீர்களா? அவர் வாசல்படியிலிருந்து தட்டிக்கொண்டிருக்கிறார். உங்களோடு அவர் வசிக்க உங்கள் உள்ளத்தை அவருக்குக் கொடுங்கள். காரணம் நீங்களே தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *