இச்சிக்கப்படத்தக்கவைகள் ஞானத்திற்கு நிகரல்ல (Desirable things are not equal to wisdom)

நீதி 8:10,11 வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Q7bmcaDTRU

இந்த உலகில் இரண்டாம் மூன்றாம் இடத்தில் இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு முதலாம் இடத்திற்கு வரவேண்டும் என்ற இச்சை இருக்கிறது. முதல் இடத்தில் இருக்கும் கோடீஸ்வரருக்கு, யாரும் அவரை மேற்கொள்ளக் கூடாது என்ற இச்சை இருக்கிறது. சிலருக்குப் பெரிய அரண்மனை கட்ட வேண்டும் என்றும், விலையுயர்ந்த வாகனம் வாங்க வேண்டும் என்றும், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்க வேண்டும் என்ற இச்சையும் காணப்படுகிறது. சாலொமோன் தான் இச்சிக்கப்படத்தக்கவைகளில் ஒன்றையும் அவன் விட்டு வைக்கவில்லை. அவன் 300 மனைவிகள், 700 மறுமனையாட்டிகளை வைத்திருந்தான். ஒரு முறை பார்த்த தன்னுடைய மனைவியையோ அல்லது மறுமனையாட்டியையோ அவன் மறுபடியும் பார்க்கச் சில மாதங்கள் ஆகும். அப்படியாக அவன் அநேக காரியங்களை இச்சித்தான். அப்படிப்பட்டவன் தான் சொல்லுகிறான், ஞானத்திற்கு நிகராக ஒன்றையும் சொல்ல முடியாது என்பதாக.

இந்த பரந்த உலகில் உள்ள எதையும் விட ஞானத்தை நாம் அதிகமாக மதிப்பிட்டால் மட்டுமே ஞானத்தைப் பெற முடியும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வேலையில் பதவி உயர்வை விட, பணத்தை விட, அனைத்து நகைகள், தங்கம், வெள்ளி, சொத்துக்கள் மற்றும் நீங்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் அனைத்தையும் விட தெய்வீக ஞானத்தை நீங்கள் அதிகமாக மதிப்பிட்டால் மட்டுமே ஞானத்தைப் பெறுவீர்கள். ஆண்டவரே, இந்த பூமியில் உள்ள எதையும் விட என் வாழ்க்கையில் உமது ஞானம் இருக்க வேண்டும் என்று கேட்கிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது என்று யாக்கோபு 3:17 கூறுகிறது. இதில் விவரிக்கப்பட்டுள்ள தெய்வீக ஞானத்தின் பண்புகள் என் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று ஆண்டவரிடம் கேளுங்கள்.

இந்த உலகில் இராணுவ பலத்தில் வேறெந்த நாடும் அமெரிக்காவிற்கு நிகரில்லை என்று சொல்லுவார்கள். உற்பத்தி திறனில் வேறெந்த நாடும் சீனாவிற்கு நிகரில்லை என்று சொல்லுவார்கள். ஓட்டப்பந்தயத்தில் வேறொருவரும் உசைன் போல்ட்டிற்கு நிகரில்லை என்று சொல்லுவார்கள். அதுபோலத்தான், வெள்ளி, பசும்பொன், முத்துக்கள் இவைகளெல்லாம் ஞானத்திற்கு நிகரில்லை. நிகரில்லாத ஞானத்தை வாஞ்சியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *