வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற தேவன்.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. சங். 65:11

காலங்கள் கர்த்தருடையது. ஒவ்வொரு நொடியும், நிமிடங்களும், மணியும், நாட்களும், வாரங்களும், மாதங்களும்,  வருஷங்களும் கர்த்தருடையது. 2024 முழுவதும் அனேக நன்மைகளினால் நம்மை திருப்தியாய் ஆசீர்வதித்த தேவன், 2025-ல் அதைக் காட்டிலும் மேன்மையாக நம்மை நடத்துவார். நடந்து வந்த வழிகளிலெல்லாம் நம்மை சுமந்து வந்தவர், புது வருடத்திலும் தகப்பன் தன் பாலகனைச் சுமப்பது போல, நம்மைத் தாங்கி, ஏந்தி, தப்புவித்து நடத்துவார். நம்முடைய வாழ்வின் அத்தனை நன்மைகளும் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக். 1:17). கர்த்தர் தீமை செய்ய அறியாதவர், நன்மைகளை மாத்திரம் செய்கிறவர்.

வருஷத்தை அவருடைய நன்மைகளினால் முடிசூட்டுகிறார். கிரீடமானது தலையைச் சுற்றிலும் இருப்பது போல வருஷத்தின் துவக்கம் முதல் முடிவு மட்டும் அனேக நன்மைகளைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். அவருடைய நன்மைகள் குறைந்து போவதும் இல்லை, நின்று போவதும் இல்லை. இஸ்ரவேலருக்கு கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தைக் குறித்து மோசே எழுதும் போது, அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கம் முதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12). அவர்களைக் காட்டிலும் மேன்மையான, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் மீட்கப்பட்ட, வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் காணப்படுகிற நம்மை வருஷத்தின் துவக்கம் முதல் வருஷத்தின் முடிவுமட்டும், நம்மேல் கண்களை வைத்து விசாரித்து நடத்துவது நிச்சயம். கிருபையினாலும், இரக்கங்களினாலும், மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டி உங்களை நடத்துவார்.

நம்முடைய பாதைகள் நெய்யாய் பொழியும். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தர வழியாய் நடத்திக்கொண்டுவந்தார். அவர்களுடைய பாதையெல்லாம் ஒவ்வொரு நாளும் மன்னா பொழிந்தது. கன்மலையின் தண்ணீராய் அவர்களைத் தொடர்ந்து வந்தார். அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடவில்லை (உபா. 2:7). அவர்களில் பலவீனப்பட்டவர்கள் யாரும் இருந்ததில்லை. அவர்களுடைய பாதரட்சைகள் தேய்ந்து போகவில்லை. வஸ்திரங்கள் பழையதாய் போகவில்லை. அதுபோல ஒன்றும் குறைவு படாமல் கர்த்தர் உங்களை நடத்துவார். சங்கீதம் 65 அறுவடையின் சங்கீதமாய் காணப்படுகிறது. தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர் (சங். 65:9,10). பூமியை விசாரித்து, நீர்ப்பாய்ச்சி, செழிப்பாக்கி, ஆசீர்வதிக்கிற தேவன், உங்களையும் ஆசீர்வதிப்பார். ஆசீர்வாதமான மழை உங்கள் மேல் பெய்யும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 55264318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *