யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள், இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள் (யோசுவா 6:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-ZnMfQQQQLw
இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சுதந்தரிப்பதற்கு முன்பு அவர்களுக்கு முன்னின்ற முதல் தடை எரிகோ பட்டணத்தைச் சுற்றிக் காணப்பட்ட மதிலாயிருந்தது. அதின் நீளம், உயரம் என்ன என்பது வேதத்தில் கொடுக்கப்படவில்லை. ஆனால் ராகாப் என்ற ஸ்திரீ அதின் மேல் வீடுகட்டி வாழ்ந்தாள் என்று எழுதப்பட்டதிலிருந்து, அது பெரியதாய் காணப்பட்டிக்கும் என்று கருதமுடிகிறது. எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது, ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. சத்துரு பலவான், அவன் தனக்குரியவர்களை அடிமைப்படுத்திப் பாதுகாக்க வல்லமையுள்ளவன். ஆகையால்தான் பலவானை முந்திக் கட்டினாலன்றி அவனுடைய ஆளுகையின்கீழ் காணப்படுகிறவர்களை விடுவிப்பது இயலாத காரியம் என்று வேதம் கூறுகிறது.
எரிகோவின் அலங்கத்தைத் தகர்த்து, பட்டணத்தைப் பிடிப்பதற்குரிய இரகசியத்தை ஆண்டவர் கற்றுக் கொடுத்தார். முதலாவது யுத்தப் புருஷர்கள் எழும்பி பட்டணத்தை ஒரு நாள் ஒரு முறை வைத்து ஆறு நாட்கள் சுற்றிவரவேண்டும், ஏழாம் நாளில் ஏழு முறை சுற்றி வரவேண்டும். எரிகோ, ஒரு சிறிய நிலப்பகுதியாய் காணப்பட்டிருக்கக் கூடும், ஆகையால்தான் யுத்தப் புருஷர்கள் ஏழாம் நாளில் ஏழு முறைச் சுற்றிவர முடிந்தது. இஸ்ரவேலர்களுடைய யுத்தப் புருஷர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேராயிருந்தார்கள் என்று எண். 26:51 கூறுகிறது. ஒரு சிறிய நிலப்பரப்பில் காணப்படுகிற பட்டணத்தையும் அதைச் சுற்றிக் காணப்படுகிற அலங்கத்தைப் பிடிப்பதற்கு, ஒப்பீட்டளவில் இஸ்ரவேலர்களுடைய சேனை மிகப் பெரியதாய் காணப்பட்டது. ஆகிலும் அவர்களுடைய கீழ்ப்படிதலையும், விசுவாசத்தையும் ஆண்டவர் சோதித்துப் பார்த்தார். ஆசாரியர்கள் உடன்படிக்கை பெட்டியோடு சென்றார்கள், அவர்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் யுத்தப் புருஷர்கள் சென்றார்கள். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்த வேளையில், ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் கீழ்ப்படிந்து, விசுவாசத்தோடு அவ்வண்ணம் செய்த வேளையில் அலங்கம் அவர்களுக்கு முன்பாக இடிந்து விழுந்தது.
கர்த்தருடைய பிள்ளைகள் யுத்தச் சேனையாய் எழும்புகிற காலமாய் இந்நாட்கள் காணப்படுகிறது. உங்களுக்கு எதிராய் காணப்படுகிற எல்லா எரிகோ போன்ற தடைகளையும் துதி, ஜெபம் என்னும் எக்காளத்தை ஊதித் தகர்த்து அழிக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். தேசங்களை யுத்த மேகம் சூழ்ந்திருக்கிறது, சபைகளுக்கு விரோதமான தடைகள் அனேகம் காணப்படுகிறது. சத்துரு பாவத்தை விதைத்து ஜனங்களை அடிமைப் படுத்த தீவிரமாய் செயல்படுகிறான். ஆகையால் நம்முடைய புயபலத்தையும், எண்ணிக்கையைக் கொண்டு அல்ல, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்றுக் கொடுத்த முறைமையின் படி, விசுவாசத்தோடு நாம் எழும்பும் போது கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கட்டளையிடுவார். உங்கள் எரிகோக்களை சுற்றி நடந்து அதைச் சுதந்தரியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

