கர்த்தரை தேடுபவர்கள் சந்தோஷப்படுவார்கள். (Those who seek the Lord will be happy.)

சங் 70 : 4 உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xTKMsw1oRZM

இந்த உலகில் நம்மை மகிழ்விக்கும் காரியங்களை விட மனமடிவாக்கும் காரியங்களும் சம்பவங்களுமே அதிகம் நடைபெறுகின்றன. ஒரு நாளில் நாம் மகிழக்கூடிய காரியங்களை விட துக்கமான, துன்மார்க்கமான சம்பவங்களே நம்முடைய காதுகள் கேட்கின்றன. செய்தித்தாளை திறந்தாலும் நாம் மகிழக்கூடிய செய்திகள் என்று தேடித்தான் பார்க்க வேண்டும். எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதன் அதிகமாக துக்கத்திற்குள்ளாக செல்லுகிறான். இது மனிதனின் வீழ்ச்சியின் விளைவு. ஆதாம் பாவம் செய்ததினிமித்தம் உயிரினங்களில் சர்ப்பத்தையும், மனுக்குலத்தில் ஆணையும் பெண்ணையும், புவியுலகில் பூமியையும் ஆண்டவர் சபித்தார். அன்றிலிருந்து மனிதன் வியர்வை சிந்தியே உழைக்கவேண்டியதாய் இருக்கிறது.

ஆனால் இன்று நம்மை கிறிஸ்து இயேசு மன்னித்துவிட்டதால் நாம் மகிழ்ந்து களிகூர வேண்டும். உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக என்று சங்கீதக்காரன் கூறுகிறான். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையையும் குறைவுபடாது.

கர்த்தரைத் தேடுகிறவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? எப்பக்கமும் நெருக்கம், பிரச்சனை, போராட்டங்களே சூழ்ந்திருக்கின்றன, ஆகையால் நான் எப்படி மகிழ்ந்திருக்க முடியும் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம். தேவ ஜனங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். இக்காலத்து பாடுகள் கொஞ்சகாலம் தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதைத்தான் பவுல் 2 கொரி 4:17-ல் கூறுகிறான், காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்பதாக.

நாம் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது என்பது தானாக வந்துவிடாது. அது தானாக ஒரு மனிதனுக்கு இருக்குமென்றால் ஏன் ஆண்டவர் கட்டளை கொடுக்க வேண்டும்? பிலி 4:4 சொல்லுகிறது, கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் என்பதாக.

நம்மை அதிகமாக துக்கப்படுத்துவது பாவம், வியாதி, கவலை. இவைகளிலிருந்து விடுதலையை பெற தேவனை அதிகமாக தேடுங்கள். தேவனை அதிகமாக தேடும்போது உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும், சமாதானம் பெருகும், உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *