எழுந்து போங்கள் ( Arise and Go)

யோசுவா 1:2,3 என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CGKHBouqptQ

ஆண்டவர் யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் சொன்னார், நீங்கள் எழுந்து போங்கள். உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் என்று சொன்னார். அந்நாட்களில் இப்பொழுது இருப்பது போல மோட்டார் வாகனங்கள் கிடையாது. விமானமோ, இரயிலோ, பேருந்தோ இல்லை. அவர்கள் கால்களால் தான் நடந்து செல்ல வேண்டும். கரடு முரடான பாதையில் செல்வது என்பது சுலபமல்ல. இருந்தாலும் அவர்கள் நடந்து சென்று தேசத்தை சுதந்தரிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.

ஆபிரகாமை ஆண்டவர் நகந்துகொண்டே இருக்கச் சொன்னார். கண்களை ஏறெடுத்து பார்க்கச் சொன்னார். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளையும் சுற்றி பார்க்கச் சொன்னார். மாத்திரமல்ல, ஆபிரகாமிடம் நீ எழுந்து நடந்து திரி என்று சொன்னார். நீளம், அகலம் எல்லாவற்றையும் பார்த்து தன்னுடைய எல்லையை விஸ்தாரமாக்குவேன் என்று தேவன் உறுதியளித்தார். ஆபிரகாமும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஓரிடத்திலிருந்து நகர்ந்து கொண்டே இருந்தான். ஏசாயா 54:2,3 கூறுகிறது, உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.

இதை தான் ஆண்டவர் யோசுவாவிடம் கூறினார். நீங்கள் எழுந்து புறப்பட்டு போங்கள். இந்நாட்களில் Comfort Zone-ல் அநேக விசுவாசிகள் முடங்கிவிட்டார்கள். அநேகர் எருசலேமிலே உட்கார்ந்துவிட்டார்கள். இன்னும் அநேகர் யூதேயாவிலேயே உட்கார்ந்துவிட்டார்கள். இன்னும் சிலர் தான் சமாரியாவிற்கு கடந்து சென்றார்கள். ஆனால் நம்மை இயேசு பூமியின் கடைசி பரியந்தம் அவருக்கு சாட்சியாக இருக்கவல்லவா அழைத்திருக்கிறார்!

கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்தை மாத்திரம் பெற்றவர்கள் அந்தியோகியாவில் நின்றுவிட்டார்கள். நாம் இயேசுவின் சீஷர்கள் என்று அழைக்கப்படுவதை மறந்துபோய்விட்டார்கள். இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு கொடுத்த கடைசி மிகப்பெரிய கட்டளை என்னவென்றால், இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் (மத்தேயு 28:18-20). ஆபிரகாம், யோசுவா மற்றும் சீஷர்கள் கீழ்ப்படிந்ததுபோல நீங்களும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து புறப்பட்டு போங்கள். உங்கள் காலடி மிதிக்கும் தேசத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *