சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் (யோவா.16:13).
ஆவியான தேவன் நம்மைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறவர். இயேசு ஆவியான தேவனுக்குக் கொடுத்த பெயர்களில் ஒன்று சத்திய ஆவியானவர். பிசாசு பொய்க்குள்ளாக ஜனங்களை நடத்துகிறவன். அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை (யோவான் 8:44). சத்தியத்திற்கும், பொய்க்கும் துவக்கத்திலிருந்து யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது (ஆதி. 3:1-5). நீங்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளில் உங்கள் ஆத்துமாவில் மரணம் உண்டாகும் என்று தேவன் சொன்னார், ஆனால் சர்ப்பம் சொன்னது நீங்கள் சாவதில்லை, மாறாக நீங்களும் தேவனைப் போல தேவர்களாயிருப்பீர்கள் என்றது. பொய் எப்போதும் கவர்ச்சியாக இருக்கும், இனிப்பாக இருக்கும், நம்மை மேட்டிமைக் கொள்ளும்படி செய்யும், எளிதில் செவிசாய்க்கச் செய்யும். ஆதி பெற்றோர்கள் இருதயம் மேட்டிமைக்கொண்டு பொய்க்கு செவிகொடுத்து, பாவத்தில் விழுந்ததின் நிமித்தம் ஏதேனிலிருந்து தேவனால் துரத்தப்பட்டார்கள். சத்துரு அதே தந்திரத்தை காலாகாலமாய் பயன்படுத்தி அனேகரை தன்னுடைய பொய்யினால் வீழ்த்துகிறான்.
கர்த்தருடைய பிள்ளைகள் தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொளும்படிக்கு அழைக்கப்பட்டவர்கள் (சங்.37:3). கர்த்தருடைய வசனம் சமூலமும் சத்தியம் என்று வேதம் சொல்லுகிறது. அந்த சத்திய வசனத்தைக் கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் நாம் வாஞ்சிக்கவேண்டும். யோவான் காயுவுக்கு எழுதும் போது, நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்து சகோதரர்கள் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை என்று கூறுகிறார். உண்மையுள்ள ஊழியக்காரன் தன் பிள்ளைகள் சத்தியத்தில் நடப்பதைக் கண்டு அவன் இருதயம் களிகூறும். அவர்கள் சாட்சியுள்ள வாழ்க்கையைக் கண்டு மனம் மகிழும்;.
சபைகளைக் குறித்து கர்த்தருடைய நோக்கம் என்ன? அவைகள் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். சபைகளின் பலபீடங்கள் எல்லாம் துப்புரவான சத்திய வசனத்தைக் கற்றுக்கொடுக்கிற இடங்களாய் காணப்படவேண்டும். ஆனால் அனேக வேளைகளில் சபைகள் தங்கள் கடமைகளில் இருந்து விலகுகிறது. ஜனங்கள் கடைசி நாட்களில் எப்படிக் காணப்படுகிறார்கள் என்றால், ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோவார்கள், அந்தக் காலம் இப்போது வந்திருக்கிறது. ஆகையால் தான் கலாத்திய சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? என்று கலா. 3:1, 5:7-ல் கேட்கிறதைப் பார்க்கிறோம். அப்படிச் செய்கிறவன் பொல்லாத சத்துருவாகிய பிசாசு. ஜனங்கள் சத்தியத்தை அறியாதபடிக்கு தடைசெய்கிறான், அவர்கள் மனக்கண்களைக் குருடாக்கிவிடுகிறான்.
ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறவர். அவருடைய அபிஷேகம் சகலவற்றையும் குறித்து நமக்குப் போதிக்கும். ஆவியானவர் பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்துக் கண்டித்து உணர்த்துகிறவர். ஆவியானவருடைய ஆளுகைக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிப்போமா?. அப்போது அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தி, சத்தியத்தினால் விடுதலையாக்கி, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar