இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான் (உபா. 33:29).
உபாகம புஸ்தகம் மோசே மரணமடைவதற்கு முன்பு இரண்டு மாதங்களுக்குள் எழுதப்பட்டது. அவன் கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்து வாழ்த்திச் சொன்ன வார்த்தைகள், இஸ்ரவேலே நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?. ஆவிக்குரிய இஸ்ரவேலாகள் நாமாய் காணப்படுகிறோம். இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகள் பாக்கியவான்களாகக் காணப்படுகிறார்கள். அனேக வேளைகளில் நம்முடைய மேன்மையை நாம் அறிந்துகொள்ளுவதில்லை. நாம் பாக்கியவான்கள், விஷேசித்தவர்கள் என்ற உணர்வு கர்த்தருடையப் பிள்ளைகளுக்குள் காணப்படுவது அவசியம்.
நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்துகொண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். நாம் அவரை தெரிந்துகொள்ளவில்லை, மாறாக அவர் நம்மைத் தெரிந்துகொண்டார் (யோவான் 15:16). உலகில் கோடிக்கணக்கான ஜனங்கள் காணப்பட்டிருந்தும் நம்மை அவருடைய சொந்த ஜனங்களாய் தெரிந்துகொண்டதினால் நாம் பாக்கியவான்களாய் காணப்படுகிறோம். நம்மைக் காட்டிலும் நல்லவர்கள் அனேகர் காணப்பட்டிருந்தும், நம்மை முன்குறித்து, தெரிந்தெடுத்து, அவருடைய இரத்தத்தினால் மீட்டெடுத்து, பிள்ளைகளாகும் அதிகாரத்தைக் கொடுத்தது நம்முடைய மேன்மையாய் காணப்படுகிறது. நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று வேதம் கூறுகிறது. அதே கிருபையை நமக்கும் கர்த்தர் கொடுத்து நம்மை இரட்சித்ததினால் நமக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை.
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? (உபா. 4:7). நாம் ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரைத் தொழுதுகொள்ளும் போது, அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறார். நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாயிருப்பேன் என்று வாக்களித்தவர், நாம் கூடிவரும் போது நம் நடுவில் வந்து உலாவுகிறார். அவரே நம்முடைய அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் மிகச் சமீபமாயிருக்கிற துணையாயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போதெல்லாம் பதில் தருகிற தேவன். ஆகையால் நாம் பாக்கியவான்களாய் காணப்படுகிறோம்.
கர்த்தருடைய வேதத்தைப் பெற்ற நமக்கு ஒப்பான, இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? வேதத்தை வாசிக்கிறவனும், வேதவார்த்தைகளைக் கேட்கிறவனும், எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கிவான்கன் என்று வேதம் கூறுகிறது. இரவும் பகலும் அவருடைய வேத்தில் தியானமாயிருக்கும் போது நாம் செய்வதெல்லாம் வாய்க்கும் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம். வேத்தை நேசித்து வாசிக்கும் போது, நமக்கு மிகுந்த சமாதானமுண்டு. அவர் தம்முடைய வசனத்தை அனுப்பி நம்மைக் குணமாக்குகிறவர். அவருடைய வார்த்தைகளை நம்முடைய இருதயங்களில் வைத்துவைக்கும் போது, பாவம் நம்மை மேற்கொள்ளுவதில்லை. கர்த்தருடைய வார்த்தைகளில் ஜீவன் காணப்படுகிறது. அந்த வார்த்தைகளே நம்மை உயிர்ப்பிக்கவும், எழுப்புதல் அடையும்படி செய்கிறது. ஆகையால் நமக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Doha – Qatar