ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும், உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான் (2 நாளா. 14:11).
ஆசா, சாலொமோனுக்கு பின்பு யூதாவில் தோன்றின மூன்றாவது ராஜா. ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களைத் தகர்த்து கர்த்தரின் பார்வைக்கு நலமானதைச் செய்தவன். அவனுடைய ஆட்சியின் நாட்களில் தேசம் அமரிக்கையாயிருந்தது. அவன் கர்த்தருக்குப் பிரியமாய் ஆட்சி செய்ததால் அவன் செய்த எல்லாக் காரியங்களும் வாய்த்தது. அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு யுத்தத்திற்கு வந்தான். ஆசாவும் அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் காணப்படும் போது, எதிரிகள் பொறாமை கொண்டு, நமக்கு விரோதமாய் வருவார்கள். ஆகையால் எதிரியின் திட்டங்களை முன்னறிந்து, அவனுடைய கிரியைகளை மோப்பம் பிடித்து, எப்பொழுதும் யுத்த முனையில் நிற்கிறோம் என்ற விழிப்போடு கர்த்தருடைய ஜனங்கள் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
ஆசா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். நம்முடைய இக்கட்டான வேளைகளில் முதலாவது கர்த்தருடைய முகத்தைத் தேடுகிறவர்களாய் நாம் காணப்படவேண்டும். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் (சங்கீதம் 46:1). அவரே நமக்கு மிகவும் அருகாமையிலிருந்து உதவிச்செய்கிறவர். என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமியா 33:3) என்று வாக்களித்திருக்கிறார். ஆகையால் ஆசாவைப் போல உங்களுடைய இக்கட்டான வேளையில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவரே நமக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதம், உதவி செய்யும் கன்மலை. அவரை நோக்கிப் பார்த்த முகங்கள் வெட்கப்பட்டுப் போனதில்லை.
ஆசா கர்த்தரை நோக்கி, நீர் பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறவர், அது உமக்கு லேசான காரியம் என்று தன்iனை எதிரியின் சேனையோடு ஒப்பிடும் போது பெலனற்றவன் என்று அறிக்கையிட்டான். தன் கொஞ்சத்தை ஒத்துக்கொண்டான். நீர் எங்களுக்குத் துணை நில்லும். உம்முடைய நாமத்தில் இந்த ஏராளமான கூட்டத்திற்கு எதிராக வந்தோம் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்தான். சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (எரே. 40:29). பெலன் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது கர்த்தருக்கு லேசான காரியம். நாம் கர்த்தரை சார்ந்து நிற்கவேண்டும், அப்போது அவர் எந்த நிலமையில் காணப்படுகிறவர்களுக்கும் உதவிசெய்கிறவர். தாவீது கர்த்தரைச் சார்ந்து அவருடைய நாமத்தில் கோலியாத்திற்கு விரோதமாய் கடந்து சென்ற வேளையில் கர்த்தர் பெரிய ஜெயத்தைக் கட்டளையிட்டார். கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்கிறவர். கல் மழையின் மூலமும், தேவ தூதனை அனுப்பியும், எதிரிகளை ஒருவருக்கு விரோதமாய் எழுப்பியும், எதிரியின் சேனைக்குள் துற்செய்தியை அனுப்பியும் நமக்காய் யுத்தம் பண்ணுகிறவர்.
ஆசா கருத்தான வார்த்தைகளை ஜெபத்திலே பயன்படுத்தினான், நீர் எங்களுக்குத் துணை நில்லும், மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்று கூறினான். நீங்கள் ஜெபம் பண்ணும் போது வீண் வார்த்தைகளை அலப்பாதிருங்கள் என்று வேதம் ஆலோசனைச் சொல்லுகிறது. ஆனால் கருத்தான வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது உடனடியாக பதில் தருகிறவர். எசேக்கியா ராஜா அசீரிய சேனையைப் பார்த்து அவர்களோடு இருப்பது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று சொன்னான் (2 நாளா. 32:8). உடனடியாக கர்த்தர் தேவ தூதனை அனுப்பினார், அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள் (2 நாளா. 32:21). ஆசா கருத்தாய் ஜெபித்த வேளையில், கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள். எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அவர்கள் முற்றிலும் தோற்றுப்போனார்கள். உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள். உங்களை துன்பப்படுத்துகிறவர்கள் இயேசுவை துன்பப்படுத்துகிறவர்கள் (அப். 9:4). கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். உங்களுக்கு உதவி செய்வது கர்த்தருக்கு லேசான காரியம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar