II பேதுரு 1 : 2. தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
அப்போஸ்தலனாகிய பேதுரு மூலமாக ஆவியானவர் இந்த வார்த்தையை விசுவாசிகளுக்கு சொல்கிறதை பார்க்கிறோம். ஒவ்வொருநாளும் தேவனாகிய பிதாவையும், குமாரனாகிய இயேசுகிருஸ்துவையும் அறிகிற அறிவிலே வளர வேண்டும். இதே புஸ்தகம் கடைசி அதிகாரம் கடைசி வசனத்திலும் 2 பேதுரு 3 :18ல் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள் என்று திரும்பவும் பேதுரு அழுத்தமாக சொல்கிறதை பார்க்கிறோம்.
இந்த உலகத்தில் வாழும் வரை உலகத்திற்குரிய அறிவை நாம் வளர்த்துக்கொள்கிறோம்; குழந்தை பருவத்திலிருந்து, பள்ளி பருவம், வேலைபார்க்கும் பருவும் மற்றும் முதிர் பருவத்திலும் அநேக உலக அறிவுகளை நாம் கற்கிறவர்களாக காணப்படுகிறோம். இந்த உலகத்துக்குரிய அறிவு தேவை தான்; ஆனால் இந்த அறிவு நமக்கு கிருபையும் சமாதானத்தையும் கொடுக்க முடியாது. கிருபையும் சமாதானமும் வேண்டுமென்றால் அனுதினமும் நாம் பிதாவையும் குமாரனாகிய யேசுவையும் அறிகிற அறிவில் வளர வேண்டும்.
நாம் கிறிஸ்துவை அறிகிற அறிவில் குழந்தைகளாக இருப்பது கர்த்தருக்கு பிரியமில்லாத காரியம். எப்படி ஒரு குழந்தை பிறந்தவுடன் பெற்ற தகப்பன் குழந்தை சரியான நேரத்தில் பேசவேண்டும், சரியான நேரத்தில் நடக்க வேண்டும், சரியான நேரத்தில் ஓட வேண்டும், சரியான நேரத்தில் படிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்களோ, அதே போல நம்முடைய பரம தகப்பனும் ஒவ்வொருநாளும் நாம் ஆவிக்குரிய காரியங்களை குறித்த அறிவில் தேறினவர்களாக வளரவேண்டும் என்று விரும்புகிறார்.
அப்படி நாம் வேதத்தின் மூலம் நாள் தவறாமல் கர்த்தரை அறிகிற அறிவில் வளருவோமென்றால், கர்த்தர் சொல்கிறார் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகும் என்பதாக; கூடும் என்று எழுதப்படவில்லை; பெருகும் என்று எழுதப்பட்டுருக்கிறது; அதாவது பத்தையும் பத்தையும் கூட்டினால் இருபது என்பதாக அல்ல; பத்தையும் பத்தையும் பெருக்கினால் நூறு என்பதாக கர்த்தருடைய கிருபையும் சமாதானமும் பெருகும்.
ஏசாயா 54 : 10. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வசனத்தின்படி கர்த்தருடைய கிருபையும் சமாதானமும் உங்களுக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருபராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org