இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகை தேடினான் (லூக்கா 19:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yQw7OQ0nsYA
இயேசு தன் ஊழியத்தின் பாதையில் எரிகோ என்ற ஊரில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறியும்படிக்கு அவரைப் பார்க்க வகை தேடினான். அந்நாட்களில் ரோமர்களின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேல் தேசம் காணப்பட்டதினால், ஆயத்தீர்வையையும் வரியையும் வசூலிக்கிற தொழிலைச் செய்கிறவர்களை, யூதர்கள் தேசத் துரோகிகளாகப் பார்த்தார்கள். அதுபோல, தங்களையும் ஐசுவரியவான்களாக்குவதற்கு குறிக்கப்பட்ட வரியைப் பார்க்கிலும் அதிகமாய் வசூலித்ததினால், யூதர்கள் இவர்களை மேலும் அதிகமாய் வெறுத்தார்கள். சகேயு தீர்வையும் வரியையும் வசூலிக்கிறவர்களுக்கு தலைவனாய் காணப்பட்டான். சகேயு என்ற பெயரின் அர்த்தம் சுத்தமானவன்! ஆனால் உண்மையில்லாத, சுத்தமில்லாத ஒரு தொழிலைச் செய்து வந்தான். சிலருடைய பெயருக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பிருப்பதில்லை, அது போல சகேயுவும் காணப்பட்டான். ஒருநாள் இயேசு வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட உடன் அவரைப் பார்க்க விரும்பினான். நம்மில் விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்குகிறவர் கர்த்தர். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி அமர்ந்து இருந்தான். அவன் ஐசுவரியவானய் காணப்பட்டிருந்தும் ஒரு சிறுவனைப் போல இயேசுவைப் பார்க்கும் படிக்கு மரத்தில் ஏறி அமர்வதற்கும் அவன் வெட்கப்படவில்லை. கிரேக்கர்கள் பிலிப்புவிடம் வந்து ஐயா இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக்கொண்டதைப் போல சகேயுவிடமும் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகக் காணப்பட்டது. நமக்குள்ளும் இயேசுவைப் பார்க்கவேண்டும், அவரை சந்திக்கவேண்டும் என்ற வாஞ்சை அதிகமாய் காணப்படவேண்டும். வேதத்தை வாசிக்கும் போதும் அவருடைய சத்தத்தைக் கேட்க ஆவலாய் வாசிக்க வேண்டும். யோபு, நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து, என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்துä காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன் என்றான் (யோபு 23:34). ஆனால் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போதெல்லாம் நமக்குச் சமீபமாயிருக்கிறவர். நாம் ஒருமனப்படும் போது நம் நடுவில் இருக்கிறவர். நாம் சபை கூடி வரும்போது, ஏழு பொன் குத்து விளக்குகளாகிய சபைகளின் நடுவில் உலாவுகிறவர், நம் நடுவில் உலாவுவார். அவரைக் கண்டு சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்ற ஜனங்கள் நாம் விஷேசித்தவாகள்.
இயேசு அத்தி மரத்தின் கீழ் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டார். இயேசு எப்படிப் பட்டவர்? நம்மைக் காண்கிறவர். பூமியெங்கும் உலாவுகிற கண்களை உடையவர். ஆகார் என்னைக் காண்கிற தேவன் என்ற பெயரை ஆண்டவருக்குப் போட்டாள். கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு உங்களைக் காண்கிறவர். உங்கள் நிலைமைகளை அறிகிறவர். அவரைக் காண நாம் வாஞ்சிக்கும் போது, நம்மைக் கண்டு நம் தேவைகளைச் சந்திக்கிறவர்.
இயேசு அவனை நோக்கிப் பார்த்து சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். இயேசு எப்படிப் பட்டவர்? உங்கள் பெயர்களை அறிந்திருக்கிறவர். உங்களைப் பெயர் சொல்லி அழைத்த தேவன் அவர். மேய்ப்பன தன் ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போல நம் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகிறவர். நம் ஒவ்வொருவருடைய பெயர்களையும் அறிந்தவர். உள்ளங்கையில் நம்மை வரைந்து வைத்திருக்கிற தேவன் அவர். நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று வாக்களித்தவர் (ஏசாயா 66:22).
இயேசு எப்படிப் பட்டவர்? உங்கள் வீடுகளில் தங்க விரும்புகிறவர். உங்களோடு வாசம் பண்ண விரும்புகிறவர். இயேசு ஊழியத்தின் பாதையில் பெத்தானியா வரும் போதெல்லாம் மார்தாள், மரியாள், லாசரு என்பவர்களுடைய வீட்டில் தங்குவது வழக்கம். காரணம், அவர்கள் மேல் இயேசு அன்பாக இருந்தார். அவர்களும் இயேசுவின் மீது அன்புள்ளவர்களாய் இருந்தார்கள். நாமும் ஆண்டவரிடத்தில் அன்பு செலுத்தும் போது நம்மோடு நம் வீட்டில் வந்து தங்குவார். சகேயு, தான் எதிர்பாராத இந்த வார்த்தைகளைக் கேட்ட போது, சந்தோஷத்தோடு இயேசுவை ஏற்றுக்கொண்டு அழைத்துக்கொண்டு போனான். இயேசுவைக் குறித்து மற்றவர்கள் இவர் பாவிகளிடத்தில் தங்கும்படிக்குப் போனார் என்று முறுமுறுத்த வேளையில், இயேசுவைக் கண்ட சகேயு, தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டு, அவர் இயேசு என்பதை அறிநது, மனம்திரும்பி, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கின துண்டானால் நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசுவைக் கண்டமாத்திரத்தில், அவனுடைய பெயரைச்சொல்லிக் கூப்பிட்டு அவன் வீட்டில் தங்கும் படிச் சென்ற வேளையில், அவன் பாவ உணர்வு அடைந்தான். ஏசாயா தேவாலாயத்தில் கடந்து சென்று உயரமும் உன்னதமுமான ஸ்தானத்தில் வீற்றிருக்கிற இயேசு ராஜாவைக் கண்டமாத்திரத்தில், பாவ உணர்வு அடைந்து, ஐயோ அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன், சேனைகளின் கர்த்தரை என் கண்கள் கண்டதே என்று அறிக்கையிட்டான். அது போல சகேயுவும் தன் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டவுடன் ஆண்டவர் சொன்னார், இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. என்று கூறி அவனை ஆபிரகாமின் குமாரனாய் மாற்றி ஆசீர்வதித்தார். இயேசு எப்படிப்பட்டவர்? நம்மை இரட்சிக்கிறவர், பாவங்களிலிருந்து விடுவிக்கிறவர். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இயேசு என்ற நாமத்தைத தவிர இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியில்லை. ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நமக்கும் தந்து ஆசீர்வதிக்கிறவர்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar