வஞ்சிக்கப்படாதிருங்கள்.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (மத்தேயு 24:4).

இயேசு தன்னுடைய ஊழியத்தின் நாட்களில் உபதேசித்த காரியங்களில் மூன்று முக்கியமான வெளிப்பாடுகள் காணப்படுகிறது. ஒன்று அவருடைய மலைப் பிரசங்கம், ஊழியத்தின் துவக்க நாட்களில் கர்த்தர் கற்றுக்கொடுத்த வார்த்தைகள், அவைகளை மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஊழியத்தின் கடைசியில் ஆண்டவர் மேல்வீட்டறை உபதேசத்தைக் கொடுத்தார், அவைகள் யோவான் 13 முதல் 17 அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆண்டவர் கற்றுக்கொடுத்த உபதேசம் ஒலிவ மலை வெளிப்பாடாய் காணப்படுகிறது, அவைகளை மத்தேயு 24, 25-ம் அதிகாரங்களிலும் லூக்கா 21-ம் அதிகாரத்திலும் எழுதப்பட்டிருக்கிறது, கர்த்தருடைய வருகையின் நாட்களில் சம்பவிக்கப் போகிற அனேகக் காரியங்கள் ஒலிவ மலை வெளிப்பாட்டில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலில் முதலில் நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (லூக்கா 21:8) என்பதைக் கர்த்தர் முக்கியப் படுத்திக் கூறுகிறார். அவருடைய வார்த்தையின்படியே கடைசி நாட்களில் நடக்கிற சம்பவங்களும் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருடைய வருகையின் நாட்களில் நீங்கள் வஞ்சிக்கப்படாதபடி உங்களைக் காத்துக் கொள்ளவேண்டும். உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்று வெளி. 12:9-ல் சாத்தானைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது என்று 2 கொரி. 11:3-ல் எழுதப்பட்டிருக்கிறது. சர்ப்பம் என்னை வஞ்சித்தது என்று ஏவாளும் கூறினாள்(ஆதி. 3:13). வஞ்சிக்கிற ஆவிகள் எங்கும் கிரியை செய்கிற நாட்கள் இந்நாட்களாய் காணப்படுகிறது.  நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியவேண்டும்; இயேசு என்ற நாமத்தைப் பயன்படுத்தி அனேகரைக் கடைசி நாட்களில் வஞ்சிப்பார்கள். ஆண்டவர் சொன்னார், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத். 24:5). கள்ளத் தீர்க்கதரிசிகளும் கள்ளக் கிறிஸ்துகளும் எழும்பி இயேசுவின் நாமத்தைக் கூறி அனேகரை வஞ்சிப்பார்கள். பிசாசு வேறொரு நாமத்தில் வந்தால் நாம் எளிதாய் கண்டுபிடித்து விடலாம், அவனுடைய நாமத்தில் வந்தாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இயேசு என்ற நாமத்தில் வரும்போது பகுத்தறிவது கடினம், ஆகையால் அந்த தந்திரமான வழியைப் பயன்படுத்தி வருகிறான்.

ஏன் வஞ்சிக்கிற ஆவிகளைக் கர்த்தர் அனுமதிக்கிறார்? சத்தியத்தின்மேலுள்ள அன்பை கர்த்தருடைய பிள்ளைகளை விட்டு அதை அங்கிகரியாமற்போனடியால், சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் அனைவரும் பிரியப்படுகிறதினால், அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்(2 தெச. 2:10-12). கர்த்தருடைய ஜனங்கள், ஊழியர்கள், சத்திய வசனத்தின் மேல் உள்ள அன்பை விடும் போது, கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசியாமல் கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கும் போது, கொடிய வஞ்சகத்தைக் கர்த்தர் உங்களுக்குள் அனுப்புவார். நீங்கள் வஞ்சிக்கப்படாமல் காணப்பட வேண்டும் என்றால் சத்திய வசனத்தின்படி உங்கள் விசுவாச வாழ்க்கையைக் கட்டுங்கள், ஊழியத்தைக் கட்டுங்கள். சபைகள் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாய் காணட்டும். பெரேயா பட்டணத்து ஜனங்களைப் போல, அப்போஸ்தலனாகிய பவுலின் பிரசங்கம் கூட வேதவசனத்திற்கு ஒத்திருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்து, எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள்.

கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். ஆகையால் அடையாளங்கள் அற்புதங்கள் நடக்கிறது என்பதை வைத்து இயேசு தான் இதைச் செய்கிறார் என்று நம்பிவிடாதிருங்கள். ஆண்டவர் சொன்னார், மரம் தன் கனியினால் அறியப்படும். ஒரு மரத்தில் கனிகள் வரக் காத்திருக்கவேண்டும், அதுபோல் எல்லாரையும் உடனடியாக நம்பிவிடாதிருங்கள்,  அவர்களுடைய ஜீவியம் கனியுள்ளதாய் காணப்படுகிறதா என்று காத்திருந்து அறிந்துகொள்ளுங்கள். நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிக்கிறவர்களைக் கூட சாத்தான் தன் வாலினால் விழத்தள்ளுகிற பொல்லாத நாட்கள் இவைகள். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *