முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்

மத்தேயு 10 : 22. என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

மத்தேயு 10ம் அதிகாரம் முழுவதுமாக வாசிக்கும்போது இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளையாக, இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால் ( மத் 10 : 5 ) என்று காணப்படுகிறது.

அந்த கட்டளைகளில் ஒன்று முடிவுப்பரியந்தம் நிலைநிற்க வேண்டும். காரணம் கடைசி நாட்களில் அவருடைய நாமத்தினால் உலகத்தாரால் பகைக்கப்படும் சூழ்நிலை வரும்; உபத்திரவங்கள் வரும்; கஷ்டங்கள் வரும்; ஒரு வேலை மரணத்தை சந்திக்க கூட நேரிடும். ஆயினும் கர்த்தருடைய உன்னதமான பணியில் நிலைநிற்க வேண்டும். அப்படி நிலைநிற்பவர்கள் தான் ரட்சிக்கபடுவார்கள்.

ஒரு கிராமத்தில் இதுவரைக்கும் இல்லாமல், ஒரு சில குறிப்பிட்ட அமைப்பு, மாதந்தோறும் ஒரு இரவு நேர சந்திப்பை ஒழுங்குபடுத்தி நடத்திக்கொண்டு வருகிறார்கள். அவற்றில் இளம் வாலிபர்கள் முதற்கொண்டு மூத்தவர்கள் வரை சுமார் நூற்று கணக்கானவர்கள் பங்குகொள்கிறார்கள். அந்த சந்திப்பின் நோக்கமே, கிறிஸ்தவர்களுக்கு வீடு கட்டவோ, நிலம் விற்கவோ உதவி செய்ய கூடாது; யாரும் அவர்களுடைய கடையில் வாங்க கூடாது; கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன வகையில் நெருக்கடிகளை கொடுக்கலாம்; சபையை எப்படி சீர்குலைக்கலாம் என்றே அவர்கள் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட காரியங்களால் நாம் உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். காரணம் ஆண்டவர் ஏற்கனவே சொல்லிவிட்டார் என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள் என்று. ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் ( மத் 10 : 16 ).

ஆண்டவரையே பார்த்து பெயல்செபூல் என்று சொல்வார்களென்றால், உங்களையும் என்னையும் பார்த்து உலகம் சொல்லுவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

கடைசிமட்டும் கர்த்தருக்கு சாட்சியாக நில்லுங்கள். எல்லா உபாத்திரவத்தையும் தேவ மகிமைக்காக ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவை ஒருபோதும் நிராகரித்துவிடாதிருங்கள். தைரியமாகவும் பயப்படாமலும் இருங்கள். உலகம் யேசுவினிமித்தமாக ஒருவேளை கொல்ல வகை தேடினாலும் பயப்படாதிருங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத் 10 : 28 ).

முடிவுப்பரியந்தம் நிலைத்திருந்து ரட்சிப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு செவிசாய்த்து கீழ்ப்படியுங்கள்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *