I தெசலோனிக்கேயர் 4 : 7. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.
ரட்சிக்கப்பட்ட நாட்களில் இளம் வாலிபர்கள் கர்த்தர் என் வாழ்வில் என்ன அழைப்பு வைத்திருக்கிறார் என்பதையறிய பல்வேறு ஊழியக்காரர்களை நாடுவதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழைப்பை வைத்திருக்கிறார். அதே வேலையில் நம் எல்லாருக்கும் பொதுவான ஒரு அழைப்பை கர்த்தர் வைத்திருக்கிறார்; அது பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது.
ஏன் நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும்? வசனம் சொல்கிறது உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே ( 1 பேதுரு 1 : 15 – 16 ) என்பதாக.
யார் நம்மை பரிசுத்தமாக்குவது? நாம் நாமாகவே பரிசுத்தமாக முடியாது. உலகத்தின் புனித யாத்திரை என்று எங்கு போனாலும் பரிசுத்தமாக முடியாது. வசனம் சொல்கிறது தேவன் நம்மை பரிசுத்தமாக்குகிறார். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக (1 தெச 5 : 23 ). மாத்திரமல்ல குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் நம்மை பரிசுத்தமாக்குகிறார். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் ( 1 யோவா 1 : 7 ). மாத்திரமல்ல ஆவியானவரும் நம்மை பரிசுத்தமாக்குகிறார். கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும் ( 2 தெச 2 : 13 ) என்று வசனம் சொல்கிறது.
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் ( எபிரெயர் 10 : 10 ). ஒவ்வொருநாளும் அவருடைய சரீரத்தினால் பரிசுத்தமாகுங்கள். ஒவ்வொருநாளும் பாவத்திற்கு மறித்து நீதிக்கு பிழைக்க ஒப்பொகொடுங்கள். கர்த்தர் ஒருபுறம் மன்னிக்கிற தேவனாக இருந்தாலும்; மறுபக்கம் அவர் விசாரிக்கிறவர்; நீதி செய்கிறவர்; நியாயம் செய்கிறவர் என்பதை மறக்க வேண்டாம்.
எங்கே ஒருமனமும் பரிசுத்தமும் இருக்கிறதோ அங்கே தேவன் உலாவுவார். உங்கள் சரீரம் தேவன் தங்கும் ஆலயம். பரிசுத்த அலங்காரத்துடன் தேவனை தொழுதுகொள்ளுங்கள். காரணம் கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது ( சங் 116 : 15 ). விசுவாசிகளின் அல்லது ஆராதனை நடத்துபவர்களின் அல்லது பாடுபவர்களின் அல்லது இசை வாசிப்பவர்களின் என்று எழுதப்படவில்லை. மாறாக பரிசுத்தவான்களின் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஸ்தேவானின் மரணத்தை இயேசு காணப்படுத்தினார். பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கும் இயேசு, ஸ்தேவானின் மரணத்தின் போது எழுந்து நின்றார். ஆம் பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org