சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.

 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் (சங். 90:15).

சங்கீதம் 90 தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபமாய் காணப்படுகிறது.  எழுதப்பட்ட 150 சங்கீதங்களிலும் இந்த சங்கீதம் மிகப் பழமையானதாய் இருக்கக்கூடும். காரணம் மோசே, தாவீதிற்கு முன்பாக சுமார் 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். தேவனுடைய மனிதன் என்று அழைக்கப்படுவது எந்த ஒரு மனுஷனுக்கும் கர்த்தரால் கிடைக்கிற மிகப்பெரிய கனமாய் காணப்படுகிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 400 வருஷங்கள் அடிமைகளாய் காணப்பட்ட நாட்களில் சிறுமையை அனுபவித்தார்கள். கர்த்தர்  ஆபிராமோடு பேசும் போது: உன் சந்ததியர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய் (ஆதி. 15:13) என்றார். அந்நாட்களில் எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையை கசப்பாக்கினார்கள், கடினமான வேலைகளைச் செய்யவேண்டியது இருந்தது, எபிரேய ஸ்திரீகள் ஆண்பிள்ளைகளைப் பெற்றால் பிறக்கும் போதே கொல்வதற்கும், ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும் பார்வோனிடத்தில் இருந்து கட்டளைப் பிறந்தது. இப்படிப்பட்ட அனேக சிறுமைகளை அவர்கள் அனுபவித்தார்கள், அந்த வருஷங்கள்  அவர்களுக்குத் துன்பத்தின் வருஷங்களாய் காணப்பட்டது.   உங்களுடைய வாழ்க்கையிலும் அனேக சிறுமைகளையும் துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். அன்னாள் பிள்ளைகள் இல்லாததினால் நிந்தைகளை அனுபவித்தாள். யோபு காரணமில்லாமல் இழப்புகளையும் வேதனைகளையும் அனுபவிக்கவேண்டியிருந்து. நீங்களும் காரணமில்லாமல் கஷ்டங்கள் நெருக்கங்கள் வழியாகக் கடந்து செல்லலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்வது என்ற கேள்விகள் கூட எழும்பலாம். மோசேயைப் போல நாமும் ஜெபிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

மோசே, எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் என்று வேண்டுதல் செய்தான். ஆகையால் கர்த்தர் அவர்களைத் திரும்ப எடுத்துக் கட்டினார். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்த அன்றைய தினமே கர்த்தர் அவர்களை விடுதலையாக்கினார். நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் தகப்பன் தன் பிள்ளையைச் சுமந்து வருகிறது போலச் சுமந்து வந்தார். தேனிட்ட பணியாரம் போன்ற தேவதூதர்களின் உணவை அனுதின மன்னாவாகக் கொடுத்தார். கன்மலையின் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தார். எதிரிகளிடம் இருந்து அவர்களைத் தப்புவித்தார். கர்த்தர் வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தார், இன்றும் இஸ்ரவேல்கள் அதேதேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். கர்த்தர் அவர்கள் மேல் கண்ணோக்கி அவர்களுடைய சிறுமைகளையும் நிந்தைகளையும் துன்பங்களையும் மாற்றிவிட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகள் நீங்கள் அனுபவிக்கும் சிறுமைகளையும் நிந்தைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே சொல்லிவிடுங்கள். அவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவர். உங்கள் கஷ்டங்களுக்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் ஆசீர்வாதங்களைத் தந்து உங்களை வாழ்நாளெல்லாம் மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *