அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார் (எண். 11:23)
நம்முடைய தேவன் சர்வவல்லமையுள்ளவர், அவரால் எல்லாம் கூடும். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரங்கள் உள்ளவர். அவர் செய்ய நினைத்த காரியங்கள் ஒருபோதும் தடைப்படுவதில்லை. அவருடைய வல்லமையை ஒருபோதும் கர்த்தருடைய ஜனங்கள் மட்டுப்படுத்தாதிருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எத்தனைத்தரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள், தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்(சங். 78:40,41). அவர்கள் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தின ஒரு சம்பவம் எண்ணாகமம் 11-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேல் சபை 40 வருடங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில், தேவன் ஒவ்வொரு நாளும் காலையில் அவர்களுக்கு மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார். மன்னா என்ற எபிரேய வார்த்தைக்கு “இது என்ன” என்பது அர்த்தம். மன்னா வானத்தின் தானியம் என்றும், தூதர்களின் அப்பம் என்றும் சங்கீதம் 78:24,25-ல் எழுதப்பட்டிருக்கிறது. மன்னா கொத்துமல்லி அளவாயும், வெண்மைநிறமாயும், அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கும் ஓப்பாயிருந்தது. அதை உண்டதினால் இஸ்ரவேலர்களில் ஒருவரும் பலவீனப்படவில்லை, காண்டாமிருகத்திற்குரிய பெலன் அவர்களுக்கு இருந்தது. இந்த நல்ல உணவைப் புசித்துக்கொண்டிருந்த ஜனங்களுக்கு திடீரென்று இறைச்சி வேண்டும் என்ற இச்சை வந்தது. அவர்கள் எகிப்திலே விலையில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைத்து அவர்களுடைய உள்ளம் வாடிப்போனது. நாய் தான் கக்கினதைத் தின்ன திரும்பினது, கழுவப்பட்ட பன்றி மீண்டும் சேற்றிலே புரளவும் திரும்பினது என்ற பழமொழியைப் போல, விட்டு வந்த எகிப்தைத் திரும்பிப்பார்க்கத் துவங்கினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் பலவிதமான கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், மார்க்கங்களையும் விட்டு, இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆண்டவருக்குள் வந்தபின்பு ஒருபோதும் விட்டுவந்ததைத் திரும்பி பாராதிருங்கள். வேதம் சொல்லுகிறது, கலப்பையின் மேல் கைவைத்தபின்பு பின்னிட்டுப் பார்க்கிறவன் பரலோக ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவன் அல்ல. ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் (எபி. 6:4-6). ஆகையால் தான் லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள் என்றும் வேதம் எச்சரிக்கிறது. சத்துரு நீங்கள் விட்டுவந்த பழக்கவழக்கங்களை நினைப்பூட்டி அவ்வப்போது திரும்பிப்பார்க்ச் செய்வான், ஆகையால் இயேசுவை நோக்கி, பரம அழைப்பின் பந்தயப்பொருளை பெற்றுக்கொள்ளுவதற்கு இலக்கை நோக்கி ஆசையாய் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.
மோசே, இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே என்று தேவனைப் பார்த்து முறையிட்டான். பார்வோனை பத்து முறை வாதைகளினால் வாதித்து இவர்களை விடுவித்த தேவனையும், செங்கடலை இரண்டாகப் பிளந்து நடத்திக்கொண்டு வந்த கர்த்தரையும், மாராவை மதுரமாக்கினவரையும், மன்னாவை அனுதினமும் பொழியும் கர்த்தருடைய வல்லமையையும், மோசே கூட மறந்து, கர்த்தரை மட்டுப்படுத்தி, அவ்விசுவாசத்தினால் இந்த பாரம் எனக்கு அதிகமாயிருக்கிறது, ஆகையால் என்னைக் கொன்று போடும் என்று முறையிட்டான். அதற்குக் காரணம் சுமார் 20 லட்சங்களுக்கு மேற்பட்ட இந்த ஜனங்களுக்கு இறைச்சியை எங்கிருந்து கொடுக்கக் கூடும் என்ற எண்ணம் அவனைச் சோர்வடையச்செய்தது. கர்த்தருடைய ஜனங்கள் தாவீதைப் போல நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் தன்னுடைய வல்லமையை விளங்கப்பண்ணின தருணங்களை அவ்வப்போது நினைவு கூர்ந்து அவரை துதிக்கவேண்டும். தாவீது, கோலியாத்தை வீழ்த்துவதற்கு முன்பு, சவுல் ராஜா இவன் இளைஞனாகக் காணப்பட்டதினால் போர் முனைக்கு அனுப்பத் தயங்கின வேளையில், தாவீது கூறினான், என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான் என்று கர்த்தருடைய வல்லமையினால் செய்த காரியங்களை அறிக்கையிட்டான். நாம் நம்முடைய வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளையும், அற்புதங்களையும் அறிக்கையிடுவது கர்த்தருடைய வல்லமையை தொடர்ந்து காண்பதற்கான வழியாய் காணப்படுகிறது.
கர்த்தர் மோசேயை பார்த்து, நீ ஜனங்களை நோக்கி நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபது நாள் மாத்திரமல்ல, ஒரு மாதம் வரைக்கும் இறைச்சியைப் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள் என்று சொல் என்றார். அப்படியே கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. எதையும் செய்வது கர்த்தருக்கு லேசான காரியம். மலையைப் போன்ற நம்முடைய பிரச்சனைகளை மாற்றுவது அவருக்கு எளிதானக் காரியம், உங்கள் வாழ்க்கையின் கசப்புகளை மாற்றுவது அவருக்கு லேசானக் காரியம். பெலனற்ற உங்கள் சரீரத்தின் அவயவங்களை பெலனடையச் செய்ய அவரால் கூடும். உங்கள் வாழ்க்கையின் நிந்தைகளை மாற்ற அவரால் கூடும். நீங்கள் வெட்கப்பட்ட இடங்களில் உங்களை உயர்த்தி ஆசீர்வதிக்கக் கர்த்தரால் கூடும். கர்த்தருடைய வல்லமையை மாத்திரம் உங்கள் அவ்விசுவாசத்தினால் மட்டுப்படுத்தாதிருங்கள், அதற்குப் பதிலாகக் கர்த்தரை முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கும் போது அவருடைய வல்லமையின் கரம் உங்கள் வாழ்க்கையில் அனுதினமும் வெளிப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar