கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்(யோசுவா 24:15).
யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும் நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் தான் மரணமடைவதற்கு முன்பு வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள் என்பதை இன்று தெரிந்துகொள்ளுங்கள், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். அப்போது அவர்களும் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள், அதை அவர்களுடன் உடன்படிக்கையாகவும், சாட்சியாகவும் ஏற்படுத்தினான். தான் மரித்தபின்பு கூட தன்னுடைய ஜனம் கர்த்தரை விட்டு விலகிவிடக்கூடாது, அவர்கள் கர்த்தரையே எப்பொழுதும் சேவிக்கவேண்டும் என்ற பாரம் யோசுவாவிற்குள் காணப்பட்டது.
கிதியோன் என்ற நியாயாதிபதி, நான் உங்களை ஆளமாட்டேன், என் குமாரனும் உங்களை ஆளமாட்டான், கர்த்தரே உங்களை ஆளுவார் என்றவன், இஸ்ரவேலர்கள் கொள்ளையிட்ட கடுக்கன்களை வாங்கி ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது. அவன் மரிக்கும் போது தன்னுடைய ஜனங்களுக்கும், வீட்டாருக்கும் கண்ணியை வைத்து கர்த்தரை விட்டு விலகும் படிக்குச் செய்தான்.
யூதாவை ஆண்ட ராஜாக்களில் எசேக்கியா தேவனுக்குப் பயந்து ஒரு நல்லாட்சிச் செய்தவன். ஆனால், வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, பாபிலோனிய ராஜா அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள், உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள், என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். தன் சந்ததிகளைக் குறித்து சற்றும் கவலையில்லாதவனாய் காணப்பட்டான்.
யோசுவா தன்னுடைய ஜனங்கள் கர்த்தரை மட்டும் சேவிக்க வேண்டும் என்று வாஞ்சித்தான், கிதியோன் தான் மரிக்கும் வேளையில் தன் ஜனங்களுக்குக் கண்ணியை வைத்துவிட்டு சென்றான், எசேக்கியா தன்குமாரர்களை பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு அடிமைகளாய் விற்றுப்போட்டான். இவர்களில் எந்த வகையைச் சேர்த்தவர்களாய் நாம் காணப்படுகிறோம். நம்முடைய சந்ததிகள் எழும்பி கர்த்தரை மட்டும் சேவிக்கவேண்டும், அதற்குரியவற்றை நாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஒரு போதும் தன் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் கண்ணிகளாய் காணப்படுகிற காரியங்களைச் செய்துவிடாதிருங்கள்.
குடும்பத்தின் தலைவன், அவன் குடும்பத்தின் ஆசாரியனாகக் காணப்படுகிறான். கர்த்தருக்குப் பயந்து ஜீவனம் பண்ணி, யோபுவைப் போல தன் பிள்ளைகள் இருதயத்தில் பாவம் செய்திருக்கக் கூடும் என்று கருதி, அவர்களுடைய பரிசுத்தத்திற்காய் பலிசெலுத்து வேண்டுதல் செய்தது போல, தன் பிள்ளைகளின் பரிசுத்தத்திற்காக ஜெபிக்கிறவனாகக் காணப்பட வேண்டும். தன் குடும்பம் தனக்குப் பின்பும் கர்த்தரை மட்டும் சேவிப்பதற்கு வேண்டிய எல்லா ஆவிக்குரிய காரியங்களையும் செய்யவேண்டும். பிள்ளைகளையும், குடும்பத்தையும் அதிகமாய் நேசிப்பதன் நிமித்தம் உலக பொக்கிஷங்களை மாத்திரம் சேர்த்து வைக்கிறவர்களாய் காணப்பட்டால், கர்த்தருடைய வருகையின் நேரத்தில் அவர்கள் தங்கள் நித்தியத்தை, அதிக வேதனை நிறைந்த அக்கினி கடலில் கழிக்கும் பொழுது அது அதிக வேதனையையும் துக்கத்தையும் தந்துவிடும். அதுபோல, புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள், புத்தியில்லாதவன் இடித்துப்போடுகிறாள். சகோதரிகள் கீழ்ப்படிதலினால் தங்களை அலங்கரித்து, தீமோத்தேயு விசுவாசத்தை தன் தாயாகிய ஐனிக்கேயாளிடத்திலிருந்து கற்றது போல, கர்த்தர் பேரில் விசுவாசமுள்ளவர்களாய் தன் பிள்ளைகள் வளர்த்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் குடும்ப ஜெபங்கள் தவறாமல் செய்ய வேண்டும். பிள்ளைகளும், பெற்றோருக்கு கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். எல்லோரும் ஒருமித்து குடும்பமாகக் கர்த்தரைச் சேவிக்கும்போது, கர்த்தருடைய இருதயம் மகிழும். குடும்பங்கள் சமாதானமாய் கர்த்தருக்குள் காணப்படும்போது, அவர்கள் ஆராதிக்கிற சபைகள் சமாதானம் பெற்று வளரும், அந்த சமாதானத்தின் பிரதிபலிப்பு தேசங்களிலும் காணப்படும். யோசுவாவைப் போல நாமும் குடும்பமாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar