உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் (சங். 22:24).
சங்கீதம் 22 சிலுவையின் பாட்டாகக் காணப்படுகிறது. சங்கீதக்காரனாகிய தாவீது கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 1000 வருஷங்களுக்கு முன்பாக வாழ்ந்தவராயிருந்தாலும், மேசியாவின் உபத்திரவங்களையும், பாடு மரணத்தையும் குறித்து தீர்க்கதரிசனக் கண்களில் கண்டு எழுதின பாடல் இது. ஏன் ஆண்டவர் உபத்திரவங்களின் வழியாகக் சிலுவையில் கடந்து செல்ல வேண்டும், நீங்கள் உபத்திரவப் படும் போது, அற்பமாய் எண்ணப்படும் போது, அருவருப்பாக மற்றவர்கள் கருதும் போது, அந்த வேதனைகளை முன்னறிந்து உங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்பதற்காய் காணப்படுகிறது. ஆகையால், உபத்திரவப்படுகிறவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணுவதில்லை, அதை அருவருப்பாய் கருதுவதுமில்லை, அவனுக்கு தம்முடைய முகத்தை மறைப்பதும் இல்லை, மாறாக தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளி அவனுக்கு உதவி செய்வார்.
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று சிலுவையில் ஆண்டவர் கூறின நான்காவது வார்த்தை, இந்த சங்கீதத்தின் முதல் வார்த்தையாக உள்ளது. இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்தவராய் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்து வேளையில், பிதாவாகிய தேவன், பாவிகளை நேசித்தாலும் பாவத்தை பாராத சுத்தக்கண்ணனாகக் காணப்படுவதினால், தன்னுடைய முகத்தை தன் நேச குமாரனுக்கு மறைத்தார். அவருடைய கூப்பிடுதலுக்கும் மறு உத்தரவு கொடுக்கவில்லை, அவர் கதறிச் சொன்ன வார்த்தைகளைக் கேளாமலும் இருந்தார். அந்த வேதனையை இயேசு உணர்ந்தவராயிருப்பதினால், நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் வேளையில் நமக்கு உடனடியாக உதவிசெய்வார். அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:18). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது, நாம் அறியாததும், நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களைச் செய்வார். என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்குச் செய்வேன் என்பது அவர் நமக்கருளிய வாக்குத்தத்தம். நம்முடைய கூப்பிடுதலின் சத்தத்திற்குக் கருத்தாய் செவிகொடுத்து நமக்கு உதவிசெய்கிறவர்.
உலகத்தின் ஜனங்கள் நாம் உபத்திரவப்படும் போது நம்மை அற்பமாய் கருதலாம். ஆனால் இயேசு, யாரையும் அற்பமாய் கருதுவதில்லை. அவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளையில் மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருந்தார். அவரைப் பார்க்கிறவர்களெல்லாரும் பரியாசம் பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்று நிந்தித்து, அவமானப்படுத்தி, அற்பமாய் கருதினார்கள். ஆகார், தான் ஆபிரகாமின் மூலம் கர்ப்பந்தரித்தவுடன், தன் நாச்சியாராகிய சாராளை அற்பமாக எண்ணினாள். எல்க்கானாவின் மனைவியாகிய பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; இன்னொரு மனைவியாகிய அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. ஆகையால் அன்னாள் துக்கப்படும்படியாக அவளை பெனின்னாள் அற்பமாக நினைத்து மிகவும் விசனப்படுத்தினாள். நெகேமியாவின் நாட்களில் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் செல்லி யூதர்களை அற்பமாய் பேசி நிந்தித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் சூழ்நிலைகளின் நிமித்தம் நீங்கள் அற்பமாய் கருதப்படுகிறீர்களோ, உங்கள் வெட்கத்திற்குப் பதிலாக இரண்டத்தனையான பலன்களைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பார், உங்கள் இலச்சைகள் மாறும், சோர்ந்து போகாதிருங்கள்.
யோபு உபத்திரவப்பட்ட வேளையில், ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன் (யோபு 17:6) என்று அங்கலாய்த்தான். அவனுடைய வியாதியின் நிமித்தம், அவன் மாமிசம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருந்தது, அவன் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. இஸ்ரவேலர்கள் ஆடு மேய்ப்பர்களாகக் காணப்பட்டதினால் அவர்கள் தொழிலின் நிமித்தம் எகிப்தியருக்கு அருவருப்பாகக் காணப்பட்டார்கள். உலகத்தின் ஜனங்கள் உங்கள் இனம், மொழி, ஜாதி, நிறம், தொழில் இவற்றை வைத்து உங்களை அருவருக்கலாம். ஆனால், இயேசு யாரையும் அருவருப்பதில்லை, அவர் குஷ்டரோகிகளைத் தொட்டுக் குணப்படுத்தினவர், யாருக்கும் தன்னுடைய முகத்தை அவர் ஒருபோதும் மறைப்பதில்லை. நீங்கள் அவருடைய முகத்தை நோக்கிப் பார்க்கும் போது, உங்கள் முகங்கள் பிரகாசமடையும்படிக்குச் செய்வார். அவருடைய முகத்திலிருந்து மாத்திரம் உங்களுக்கு இரட்சிப்பு வரும். உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள், உங்களைக் கேட்டருளி, உங்களை விடுவிப்பதற்கு அவர் வல்லமையுள்ளவர்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar