தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது (யோபு 29:4).
கர்த்தருடைய இரகசியச்செயல் ஒரு குடும்பத்தின் மேல் இருக்கும் போது, அந்த குடும்பமானது வாழ்ந்து செழித்திருக்கும். அவருடைய நட்பும், ஆலோசனைகளும் குடும்பத் தலைவனோடும், குடும்ப உறுப்பினர்களோடும் காணப்படும் போது, அவர்கள் கூடாரம் ஆசீர்வாதமாகக் காணப்படும். யோபு உபத்திரவங்கள் வழியாகக் கடந்து சென்ற போது, தன்னுடைய முந்திய நாட்களில் தேவன் தன்னைக் காப்பாற்றி வந்ததை நினைக்கிறான், அந்த நாட்களில் காணப்பட்ட சீரை நினைக்கிறான், தன் பாதங்களை நெய்யினால் கழுவினதை நினைக்கிறான். ஏழைகளுக்கு அவன் உதவினதையும், மற்றவர்கள் அவனுக்குக் கொடுத்த மரியாதையையும் நினைக்கிறான். அவன் தன் ஜனங்கள் நடுவே ராஜாவைப் போல வாழ்ந்ததை நினைக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளின் குடும்பங்களோடு கர்த்தருடைய இரகசியச் செயல் காணப்படவேண்டும். அவருடைய ஆலோசனைகள் நம்முடைய கூடாரத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரோடும் காணப்பபட வேண்டும். அதுவே நாம் ஆசீர்வாதமாக வாழ்வதற்குரிய வழியாய் காணப்படுகிறது.
நீங்கள் கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்யும் போது அவருடைய இரகசியம் உங்களோடு இருக்கும் (சங். 25:14). ஆபிரகாமைக் குறித்து கர்த்தர் சொல்லும் போது நீ இப்போது கர்த்தருக்குப் பயப்படுகிறவன் என்பதை அறிவேன் என்றார். காரணம் ஆபிரகாம், ஈசாக்கைத் தன் புத்திரன் என்றும், ஏகசுதன் என்றும் பாராமல் கர்த்தருக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் அவன் தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று கர்த்தர் கூறினார் (ஆதி. 22:12). இந்த இடத்தில் தான் முதல் முதலில் வேதத்தில் கர்த்தருக்குப் பயந்து என்ற வார்த்தை வருகிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு முழுவதுமாய் கீழ்ப்படிகிறவனும், உறுதியான விசுவாசம் உள்ளவனும் கர்த்தருக்குப் பயப்படுகிறவன். தன் விருப்பத்தைப் பார்க்கிலும் கர்த்தருடைய விருப்பத்தை முன்னிறுத்துகிறவனும், சுயத்தை வெறுமையாக்குகிறவனும் கர்த்தருக்குப் பயப்படுகிறவன். அப்படிப்பட்டவர்களோடு கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கும் போது, காத்தர் அவனை ஆசீர்வதிப்பார். அவன்; கைகளின் பிரயாசத்தை சாப்பிடும் படிக்குச் செய்வார், பாக்கியத்தையும் நன்மையையும் கட்டளையிடுவார், மனைவி, பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்.
நீதிமான்களோடு கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது (நீதி. 3:32). மனுஷனுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையும், குப்பையுமாய் இருக்கிறது. மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதெப்படி என்றும் வேதம் கேட்கிறது. ஆனால், இயேசுவின் இரத்தம் நம்மை நீதிமான்களாய் மாற்றுகிறது (ரோமர் 5:9). ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்படும் போது, கர்த்தர் நம்முடைய மீறுதல்கள் அக்கிரமங்களை மன்னித்து நமக்கு இரக்கம் செய்வது மாத்திரமல்ல, பாவங்களிலிருந்து ஒரு ஜெயமுள்ள ஜீவியம் செய்யவும் நமக்கு உதவிசெய்கிறார். அதுபோல, இயேசுவின் நாமத்தின் மேல் நாம் வைக்கிற விசுவாசமும் நம்மை நீதிமான்களாய் மாற்றுகிறது (ரோமர் 5:1). அவர் நாமத்தின் மேல் விசுவாசமுள்ள அத்தனை பேருக்கும் பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கர்த்தர் கொடுக்கிறார். பிள்ளைகள் என்றால் தகப்பனுடைய அத்தனை ஆசீர்வாதங்களுக்கும் சுதந்திரவாளிகளாய் காணப்படுகிறோம். நீதிக்குரிய ஜீவியம் செய்யும் போது, கர்த்தருடைய இரகசியம் உங்களோடு இருக்கும். உங்கள் கூடாரம் ஆசீர்வாதமாய் இருக்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar