நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசே. 22:30).
தேசத்தை அழிப்பது தேவனுடைய விருப்பமல்ல, அதின் குடிகளை வாதைகளினாலும், கொள்ளை நோய்களினாலும் வாதிப்பதையும் அவர் விரும்பவில்லை, எல்லாவிதங்களிலும் ஜனங்கள் வாழ்ந்து சுகமாயிருப்பதையே விரும்புகிற நல்ல தேவன் அவர். சில வேளைகளில் தேசத்தின் குடிகளின் பாவங்கள் தேவனுடைய சமூகத்தை எட்டும் போது காத்தருடைய கோபாக்கினை வெளிப்படுகிறது. எசேக்கியேல் 22-வது அதிகாரத்தில் எருசலேம் நகரத்தை இரத்தம் சிந்தின நகரம் (எசே. 22:2) என்று கர்த்தர் அழைக்கிறார். பரிசுத்த நகரம் என்று அழைக்கப்பட்டவள், இரத்தம் சிந்துகிறவள் என்று அழைக்கப்பட்டு, அருவருப்புகளால் நிறைந்த பட்டணமாய் மாறிவிட்டது. இஸ்ரவேல் தேசத்தைப் பார்த்து நீ சுத்தம் பண்ணப்படாத தேசம், கர்த்தருடைய கோபத்தினால் மழை பெய்யாத வறட்சியான தேசம் என்று சொல் (எசே. 22:24) என்றும் கர்த்தர் எசேக்கியேலைப் பார்த்துக் கூறினார். ஆகையால் தேசத்தின் குடிகள் மேல் கோபத்தை ஊற்றி, கர்த்தருடைய மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணக் கர்த்தர் தீர்மானித்தார் (எசே. 22:31). இந்நாட்களிலும் கூட கர்த்தர் அருவருக்கிற எல்லாப் பாவங்களையும் தேசத்தின் ஜனங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகையால் தான் யுத்தங்களினாலும், கொள்ளை நோய்களினாலும், வெட்டுக்கிளிகளினாலும் வருகிற அனேக அழிவுகளை அவர்கள் தலையின் மேல் கர்த்தர் சுமரப்பண்ணுகிறார்.
கர்த்தர் தேசத்தை அழிக்காதபடிக்கு, கர்த்தருக்கும் தேசத்தின் குடிகளுக்கும் இடையில் காணப்படுகிற திறப்பை அடைப்பதற்கும், பிரிவினையையும் அகற்றுவதற்கும், கர்த்தருடைய கோபத்தைத் தணிப்பதற்கும் திறப்பில் நின்று ஜெபிக்க ஒருவனைக் கர்த்தர் அந்நாட்களில் தேடினதைப் போல இன்றும் தேடுகிறார். கர்த்தர் தேடுகிற ஒருநபராய் நீங்கள் காணப்பட்டு, உங்களை ஜெபிப்பதற்கு அர்ப்பணிக்கவேண்டும். இஸ்ரவேல் தேசத்தில் காணப்பட்ட தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய வாயாயிருந்து, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு அறிவித்து, அவர்களுடைய பாவங்களைக் குறித்து எச்சரிப்பதற்குப் பதிலாக, கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சித்து, திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறார்கள், அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள் (எசே. 22:25, 28) என்று கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் குறித்து வருத்தமடைந்தார். சாரமற்ற சாந்தைப் பூசி சுவரைக் கட்டினால், வெடிப்புகளும் திறப்புகளும் நிச்சயம் உருவாகும். ஆகையால் தான் அவர்களைக் குறித்து, நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை (எசே. 13:5) என்றும் கர்த்தர் கூறினார். இந்நாட்களிலும் தங்களைத் தீர்க்கதரிசிகள் என்று கூறுகிற அனேகருடைய நிலைமைகள் அப்படியே காணப்படுகிறது, ஜனங்களுக்காகத் திறப்புகளில் ஏறுகிறவர்களும், சுவரை அடைக்கிறவர்களும் இல்லை. ஆகையால் தான் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் திறப்பிலே நிற்க உங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். தேவன் தேடுகிற ஒருநபராய் நீங்கள் காணப்படவேண்டும்.
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளைப் போல வேதத்துக்கு அநியாயஞ்செய்து, கர்த்தருடைய பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி@ பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததிற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததிற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, ஓய்வு நாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள், அவர்கள் நடுவிலே நான் கன ஈனம் பண்ணப்படுகிறேன் (எசே. 22:26) என்று கர்த்தர் வேதனைப்பட்டார். இந்நாட்களில் காணப்படுகிற ஆசாரியர்கள் என்று அழைக்கப்படுகிற அனேக சபையின் போதகர்கள் கர்த்தருடைய வேதத்திற்கு அநியாயஞ்செய்கிறார்கள், தேவனுடைய சகல ஆலோசனைகளையும் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை, நீதிக்கும், அநீதிக்கும், பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதில்லை. வேதத்தின் மகத்துவங்களைக் கர்த்தர் எழுதிக்கொடுத்திருந்தும், அவைகளை அந்நியகாரியமாக எண்ணுகிறார்கள். அவர்களும்; திறப்புகளில் ஏறினதுமில்லை, சுவரை அடைத்ததுமில்லை, அதுபோல ஜனங்களையும் திறப்பிலே நிற்க ஆயத்தப்படுத்துவதுமில்லை. ஆகையால், கர்த்தருடைய ஜனங்கள் இந்நாட்களில் தேவனுடைய இதயத்துடிப்பை உணர்ந்து திறப்பிலே நிற்க நம்மை ஒப்புக்கொடுப்போம். எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணுவதற்கு நம்மை அர்ப்பணிப்போம். யோபு தன் சினேகிதர்களுக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய சிறையிருப்பை மாற்றி இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைக் கொடுத்தது போல, நீங்களும் தேசங்களின் குடிகளுக்காகத் திறப்பிலே நின்று ஜெபிக்கும் போது இரட்டிப்பான நன்மைகளைக் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar