அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே, யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன். கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார் (ஆமோஸ் 7:5, 6).
ஆமோஸ் தீர்க்கதரிசி 3 தரிசனங்களை பார்ப்பதை, ஆமோஸ் 7:1-9 வசனங்களின் மூலம் அறியமுடிகிறது. முதல் தரிசனத்தில் வெட்டுக்கிளிகளைக் கர்த்தர் உண்டாக்கி அனுப்புகிறார். அவைகள் தேசத்தின் புல்லையும் விளைச்சலையும் தின்று தீர்த்த வேளையில் ஆமோஸ் கர்த்தரை நோக்கி, மன்னித்தருளும், யாக்கோபு எப்படி இந்த தண்டனைக்கு முன்பு நிற்கமுடியும், அவனால் தண்டனையைச் சகிக்கமுடியாது, அவன் குறுகிப்போய்விடுவான் என்று பரிந்து பேசியவுடன், கர்த்தர் மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். அடுத்ததாகக் கர்த்தர் அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்றார், உடனே அக்கினி ஆழத்தின் தண்ணீரைப் பட்சித்தது, அதோடு நிலத்தின் ஒரு பங்கையும் பட்சித்தது. உடனே ஆமோஸ் கர்த்தரை நோக்கி, நிறுத்தும், யாக்கோபு எப்படி இந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பு நிற்கமுடியும், அவனால் தண்டனையைச் சகிக்கமுடியாது, அவன் சிறுத்துப்போய்விடுவான் என்று மீண்டும் பரிந்து பேசினவுடன், கர்த்தர் மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்று மீண்டும் கூறினார். இந்த இரண்டு தரிசனங்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காக இரக்கம் பாராட்டுகிறதைப் பார்க்கமுடிகிறது.
கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிற தேவன் அவர் (யாத். 20:6). மெய்யாகவே கர்த்தர் ஜனங்களை நேசிக்கிறார், அவர்களுக்குக் கிருபையையும், தயையையும், இரக்கத்தையும் பாராட்டுகிற தேவன். நம்முடைய வாழ்க்கையில் பலவேளைகளில் நம்முடைய மீறுதல்களினிமித்தம் கர்த்தர் நம்மைத் தண்டிக்க நினைத்த வேளைகள் உண்டு, ஆகிலும் அவருடைய மனதுருக்கத்தினால் நம்மை மன்னித்து உயிரோடு வைத்திருக்கிறார்.
ஆமோஸ் மூன்றாவது தரிசனத்தைப் பார்க்கிறான். கர்த்தர் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார், அவர் கையில் தூக்குநூல் இருந்தது, அதைக்கொண்டு அந்த மதில் தூக்குநூல் பிரமாணத்தின் படிச் சரியாய் கட்டப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறார், அது இல்லை என்று கண்ட வேளையில் தண்டிக்கச் சித்தம் கொள்கிறார். இஸ்ரவேல் ஜனங்களுடைய வாழ்க்கைச் செவ்வையாகும் என்றும், கர்த்தருடைய பிரமாணமாகிய அவருடைய வார்த்தையின் படிக்கு ஜீவிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த வேளையில், இனி அவர்களை மன்னிக்கமாட்டேன் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார், நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார். சாலொமோன் பாவம் செய்த வேளையில் இரண்டுவிசைத் தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டார், ஆகிலும் அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார் (1 இரா. 11:9-10).
கர்த்தர் தேசங்களின் தலைவர்களுக்கும் குடிகளுக்கும் பலமுறை இரக்கம் செய்கிறார், அவர்கள் மீறுதல்களை மன்னிக்கிறார். தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளும்படிக்கு தருணம் கொடுக்கிறார். ஆகிலும் மனம் திரும்புவதற்கு மனதில்லாமல், இருதயங்களில் கர்வம் கொண்டு, ரசாயன ஆயுதங்களையும், தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மற்ற தேசத்தின் குடிகளை அழிக்கத் திட்டங்களைத் தீட்டும்போது, கர்த்தர் தண்டனைகளை அனுப்புகிறார். கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காமல், நிர்விசாரமாய் வணங்கா கழுத்து உள்ளவர்களாய் காணப்படும் பொழுது, கொள்ளை நோய்களையும், இயற்கைச் சீற்றங்களையும், யுத்தங்களையும் அனுப்புகிறார், அதனிமித்தம் திரளான ஜனங்கள் மரித்துப் போகிறார்கள். கர்த்தர் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், ஆனால் அவர் பட்சிக்கிற அக்கினி, எரிச்சலுள்ள தேவன் என்றும் வேதம் கூறுகிறது. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான் (நீதி-29:1). ஆனால் கர்த்தருடைய ஜனங்கள் பரிந்து பேசி, போதும் ஆண்டவரே நிறுத்தும், என்று கெஞ்சி வேண்டுதல் செய்யும் போது, கர்த்தர் மனதுருகி, அழிவிலிருந்து ஜனங்களை விடுவிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar