ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது (சங். 91:10).
கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் வைத்திருக்கிற உன்னதமான பாதுகாப்பைக் குறித்து எழுதப்பட்ட மகிமையான சங்கீதமாய் 91-வது சங்கீதம் காணப்படுகிறது. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மறைவிடத்தை வைத்திருக்கிறார், அது உன்னதமான தேவனுடைய மறைவு. உலகத்தில் காணப்படுகிற தலைவர்கள், ராஜாக்கள் பாதாள அறைகள், இரகசிய வீடுகளை உருவாக்கி யுத்தங்கள் வரும்போதும், ஆபத்துகள் வரும் போதும் தங்களைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவைகள் அவர்களுக்கு அனேக வேளைகளில் உதவுவதில்லை. நீங்கள் உன்னதமான தேவனுடைய மறைவில் காணப்படும் போது எத்தீங்கும் உங்களை அணுகுவதில்லை. அதுபோல சர்வ வல்லவருடைய நிழல் என்பது, ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கும் போது அவருடைய நிழல் உங்கள்மேல் விழுவதற்கு அடையாளமாய் காணப்படுகிறது. இளைய குமாரனைப் போலத் தகப்பனை விட்டு தூரத்தில் காணப்படும் போது தகப்பனுடைய நிழல் நம்மேல் விழுவதில்லை. காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார், அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன் (உன். 2:3) என்று சூலமித்தி கூறினது போல நீங்களும் கிச்சிலி மரம்போன்ற நேசருடன் நெருங்கி ஜீவித்து, அவருடைய நிழலில் தங்க வாஞ்சிக்கும் போது, அவருடைய பாதுகாப்பு உங்கள் மேல் எப்பொழுதும் இருக்கும். நீங்கள் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சங்கீதக்காரனைப் போல விசுவாசத்தோடு அறிக்கையிடலாம், அப்போது, கர்த்தருடைய பிள்ளைகளுடைய கூடாரத்தை ஒருவாதையும் அணுகாதபடிக்கு கர்த்தர் காத்துக்கொள்ளுவார். எகிப்து முழுவதும் பத்து வாதைகள் கடந்து வந்தது, அவைகள் எகிப்தின் குடிகள் அத்தனை பேரையும் வாதித்தது, ஆனால் அதே எகிப்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இஸ்ரவேலர்களையும் அந்த வாதைகள் தொடவில்லை. அதுபோல, கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஒரு வாதைகளும், வியாதிகளும் தொடாதபடிக்கு கர்த்தர் உங்களைக் காத்துக்கொள்வார்.
பிசாசின் இன்னொரு பெயர் வேடன், அவன் மறைவான கண்ணிகளை வைத்து கர்த்தருடைய ஜனங்களை ஆபத்தில் சிக்கவைப்பவன். ஆனால் அவனுடைய எல்லாத் தந்திரங்களுக்கும் கர்த்தர் உங்களைக் காத்து தப்பப் பண்ணுவார். கோழி தன் குஞ்சுகளைச் சிறகினால் மூடிப் பாதுகாப்பதைப் போல, நீதியின் சூரியனுடைய பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும் போது, பாழாக்குகிற கொள்ளை நோய்கள் உங்களை நெருங்குவதில்லை. கர்த்தருடைய பாதுகாப்பு உங்களோடு இருக்கும் போது, நீங்கள் ஒன்றிற்கும் ஒருபோதும் பயப்படவேண்டிய அவசியமில்லை. இரவிலும் பகலிலும் உண்டாகும் பயங்கரங்களுக்கும், சாத்தானுடைய அம்புகளுக்கும், இருட்டிலும், வெளிச்சத்திலும் உருவாகும் கொள்ளைநோய்களுக்கும், சங்காரங்களுக்கும் நீங்கள் பயப்படாதிருப்பீர்கள். துன்மார்க்கமான பொல்லாத தலைவர்களின் செய்கைகளும் கிரியைகளும் அனேகவேளைகளில் ஜனங்கள் அழிந்து போவதற்குக் காரணமாயிருக்கிறது. ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுடைய பக்கத்தில் ஆயிரம் பேரும், வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அவைகள் ஒன்றும் உங்களைச் சேதப்படுத்துவதில்லை. காரணம் உங்கள் வழிகளெல்லாவற்றிலும் உங்களைக் காக்கும் படிக்குக் கர்த்தர் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்த்தரால் நியமிக்கப்பட்ட தூதர்கள் காணப்படுகிறார்கள், அவர்கள் உங்களைச் சத்துருவின் கண்ணிகளுக்கும், கண்களுக்குத் தெரியாத ஆபத்துகளுக்கும், கிருமிகளின் தாக்குதல்களுக்கும் உங்களைத் தப்புவிக்கப்பண்ணிப் பாதுகாப்பார்கள். ஆகையால் பொல்லாப்புகள் உங்களுக்கு நேரிடுவதில்லை, பாதங்கள் இடறுவதுமில்லை. நீங்கள் சத்துருவின் கண்ணிகளின் மேல் நடந்து அவனுடைய கிரியைகளை மிதித்து நொறுக்கிப்போடுவீர்கள்.
கர்த்தருடைய ஜனங்களுடைய வாஞ்சை கர்த்தர் பேரிலும் அவருடைய ஆலயத்தின் பேரிலும் எப்பொழுதும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தை அறிந்து அவர் சமூகத்தின் மேல் நாம் வாஞ்சையாய் காணப்படும் போது, அவர் நம்மை விடுவித்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார் (சங். 91:14). இக்கட்டான வேளைகளில் நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு மறு உத்தரவு அருளுவார். அவர் ஒருவரே நம்முடைய இக்கட்டுகளில் உதவிசெய்கிறவர், மனுஷனுடைய உதவி விருதா. சிலவேளைகளில் மனிதர்கள், வாழ்க்கைத் துணைகள், பிள்ளைகள் கூட உதவிசெய்யமுடியாத வேளைகள் வரலாம், ஆனால் நம்முடைய ஆபத்து நேரங்களில் தீவிரித்து வந்து நமக்கு உதவி செய்வதற்குக் கர்த்தர் ஒருவரே மிகவும் சமீபமான துணையாகக் காணப்படுகிறார். உங்கள் ஆயுசின் நாட்களைப் பெருக பண்ணி, நீங்கள் பிழைத்திருந்து தேவனுடைய செய்கைகளை மற்றவர்களுக்கு விவரிக்கும் படிக்குச் செய்வார். உங்களைக் கொண்டு கர்த்தர் செய்ய நினைத்திருக்கிற காரியங்களை உங்களை வைத்தே செய்வார். அவருடைய தரிசனங்களையும், திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றி முடிக்கும் வரைக்கும் ஒரு வியாதிகளும், வாதைகளும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொடுவதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar