தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன், பொல்லாப்பு நடப்பித்தேன், இந்த ஆடுகள் என்னசெய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான் (1 நாளா. 21:17).
தேசத்தின் தலைவர்களுடைய பாவங்கள் தேசத்தின் குடிகளைப் பாதிக்கிறது. தலைவர்கள் துணிகரமாய் செய்கிற மீறுதல்களும், அக்கிரமங்களும், ஒரு தவறும் செய்யாத அப்பாவி ஜனங்களைக் கொள்ளைகொண்டுபோகிறது. இஸ்ரவேல் ஜனங்களில் எழுபதினாயிரம் பேர் மடிவதற்கான அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை 2 சாமுவேல் 24-ம் அதிகாரத்திலும், 1 நாளாகமம் 21-ம் அதிகாரத்திலும் நாம் வாசிக்கிறோம். தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக வீற்றிருக்கிறான். இஸ்ரவேலில் பட்டயம் உருவி யுத்தத்திற்குச் செல்லுவதற்கு உரியவர்கள் எத்தனைப்பேர் காணப்படுகிறார்கள் என்பதை எண்ணுவதற்குச் சாத்தான் தாவீதின் இருதயத்தை ஏவி விடுகிறான். என்னுடைய இராணுவ பெலத்தைக் கொண்டு எதிரிகளை தோற்கடிக்கலாம் என்று மேட்டிமைக் கொள்வதற்கும், மாம்ச பெலனைச் சார்ந்து நிற்பதற்கும், சாத்தான் அவனைத் தூண்டிவிடுகிறான். கர்த்தருடைய பெலத்தைக் கொண்டு சிங்கத்தின் வாயையும், கரடியையும் கிழித்துப்போட்டதையும், கோலியாத்தை வீழ்த்தினதையும் மறக்கும்படிக்குச் செய்கிறான். அதுபோல தேவனுடைய பிரமாணத்தையும் மீறும்படிக்கும் செய்கிறான், நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளாக அரைச்சேக்கலை காணிக்கையாகக் கொடுக்கக்கடவன் (யாத். 30:12-14). தாவீதின் இராணுவத் தலைவனான யோவாப், இஸ்ரவேலில் குற்றமுண்டாக இதைச் செய்யவேண்டாம் என்று எச்சரித்தும், தாவீது அவனுடைய ஆலோசனைகளை அசட்டைசெய்தான்.
தாவீது செய்த காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால், கர்த்தர் இஸ்ரவேலை வாதித்தார். தேவன், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி, நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன், அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி, மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள்?, இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப் பதில் சொல்லும் என்று கூறினான். தாவீது உடனே உணர்வடைந்து, இந்தக்காரியத்தை நான் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன், வெகு புத்தியீனமாகவும் செய்தேன், இப்போது நான் கர்த்தருடைய கரத்தில் விழுவேனாக, காரணம் அவருடைய இரக்கங்கள் மகாபெரியது என்று முறையிட்டான். அதற்குள் வாதை துவங்கி எழுபதினாயிரம் பேரை கொள்ளைகொண்டு போனது. எருசலேமையும் அழிக்கத் தேவன் ஒரு தூதனை அனுப்பினார், ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்று கூறி அந்த வாதையை நிறுத்தினார். ஒரு சபையின் தலைவர் மந்தையைத் தவறாக நடத்தி, அவர்கள் ஆத்தும மரணத்திற்கு காரணமாகலாம். அதுபோல உலகத் தலைவர்கள் செய்கிற மீறுதல்கள், உலக ஜனங்களின் அழிவிற்குக் காரணமாகலாம். ஆகையால் ஒருபோதும் மற்றவர்களை அழிக்கிற காரியங்களை யாரும் செய்யக் கூடாது.
நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர், மெய்யாகவே கர்த்தர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், பாவிகளின் மரணத்தைக் கூட விருப்பாத தேவன், எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறவர். இந்த ஆடுகள் என்னசெய்தது என்று தாவீதைப் போல நாமும் பரிந்து பேசி திறப்பிலே நின்று ஜெபித்து தேவனுடைய இரக்கத்திற்காகக் கெஞ்சுவோமா?.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar