சீயோனை நினை.

பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் (சங்கீதம் 137:1).

பாபிலோனில் காணப்படும் போது தான் சீயோனின் மேன்மை புரியும். பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கிறது, கறைபட்டுப் போன சபையைக் குறிக்கிறது. யூத ஜனங்கள் தங்கள் மீறுதல்கள், அக்கிரமங்கள், பாவங்கள் நிமித்தம் பாபிலோனில் அடிமைகளாக எழுபது வருஷங்கள் காணப்பட்டார்கள். குறிப்பாக யூதாவில் தோன்றின சில கடைசி ராஜாக்கள் கர்த்தரை விட்டு சோரம்போனார்கள். கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் பலமுறை எச்சரித்த பின்பும் கூட தங்கள் பாவங்களிலிருந்தும் விக்கிரக ஆராதனைகளிலிருந்தும் விடுபடமனதில்லாமல் காணப்பட்டார்கள். ஆகையால் கர்த்தர் அவர்களை நேபுகாத்நேச்சாரிடம் விற்றுப்போட்டார். இப்போது பாபிலோனில்  அடிமைகளாய் காணப்பட்ட வேளையில் சீயோனை நினைத்து, எருசலேமை நினைத்து அழுகிறார்கள். எருசலேமில் வசதியாய் வாழ்ந்ததை நினைத்து அழுகிறார்கள், அனேக உறவுகள் மரித்துப் போனதை எண்ணி அழுகிறார்கள், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டதை நினைத்து அழுகிறார்கள். எருசலேம் தேவாலயத்தில் கின்னரங்களை வாசித்து, கர்த்தரின் பாட்டைப் பாடி கர்த்தரை ஆராதித்ததை நினைத்து அழுகிறார்கள்.

இந்நாட்களில் சீயோன் என்பது கர்த்தருடைய மணவாட்டி சபையைக் குறிக்கிறது.  கற்புள்ள, உலகத்தால் கறைபடாத, கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. கடந்த பல மாதங்களாக கொரோனாவைரஸின் நிமித்தம் உலகளாவிய சபைகள் மூடியும், எல்லாரும் கூடிவரமுடியாமலும் காணப்படுகிறது. கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்த ஜனங்கள் கலங்கிப்போய் நிற்கிறார்கள், சபை என்னும் குடும்பம் சிதறிக்கிடக்கிறது. கர்த்தருடைய வேதத்தை மேலை நாடுகளின் குடிகள் மறந்ததால் கர்த்தர் தேசங்களை மறந்து விட்டார், சபைகள் மதுபான விடுதிகளாகவும், பிறமதங்களின் வழிபாட்டு ஸ்தலங்களாகவும் மாறிவிட்டது, ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை ஆராதிக்கிற ஜனங்கள் குறைந்துவிட்டார்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் சிதைந்து காணப்படுகிறது. கர்த்தரைத் தேடுவதற்கு உணர்வுள்ளவன் இல்லை, கர்த்தருடைய இருதயம் மிகவும் துக்கப்படுகிறது. சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்,  அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து (நாகூம் 2:1) என்று கர்த்தர் எச்சரித்திருந்தும் நாம் அரணைக் காக்கவில்லை, ஜெபிக்கவில்லை, திறப்பிலே நிற்கவில்லை. விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று கர்த்தர் கண்டு ஆச்சரியப்பட்டார். ஆகையால் பூமிக்கு உப்பாக, உலகத்திற்கு வெளிச்சமாக, சத்துருவின் கிரியைகளைத் தடைசெய்கிற, பூமியில் தேவனுடைய இராஜ்யமாகிய சபைகளும், கொள்ளைநோயினால் எங்கும் மூடிக்கிடக்கிறது. பாதாளத்தின் வாசல்கள் களிகூருகிறது, திரளான ஜனங்களை கொரோனா கொள்ளைநோய் வாரிக்கொள்கிறது. என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்,  அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்,  நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் (மல்கியா 4:2) என்று வேதம் கூறுகிறது, ஆனால், வெளியே புறப்பட்டுப்போவதற்குப் பதிலாக, கொரோனா கொள்ளைநோயின் நிமித்தம் ஜனங்கள் சிறைபட்டுப்போன அடிமைகள் போல வீடுகளில் அடைபட்டுக் காணப்படுகிறார்கள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, அழுகையோடும் புலம்பலோடும் கர்த்தரண்டை திரும்புங்கள். அப்போது கர்த்தர் உங்களைத் திரும்ப எடுத்துக் கட்டி சபை என்னும் குடும்பத்தோடு கர்த்தரைச் சேவிக்கிற நாட்களை துரிதமாகத் தந்தருளுவார். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்,  மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் (எரே. 31:4).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *