மத்தேயு 5:4, துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
துயரப்படுகிறவர்கள் என்ற இந்த வார்த்தை உடல் ரீதியாக மனவளர்ச்சி குன்றியவர்கள், பிறவி சப்பாணி, பிறவி குருடர்கள் என்று இவர்களை பற்றி குறிப்பிடவில்லை; மாறாக உடல் ரீதியாக நல்ல சுகமுடன் இருப்பவர்களை குறித்து இயேசு சொல்லுகிறார்.
துயரம் என்றால் வருத்தம், கவலை, பாரம், வேதனை, மனத்தாங்கல், அழுகை, புலம்பல் போன்றவை அடங்கிய ஒரு காரியம். எப்படிப்பட்டதான துயரம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்?
முதலாவது, நம்முடைய இயலாமை மற்றும் பாவத்தை குறித்த துயரம் காணப்பட வேண்டும். பாவத்தை குறித்த ஒரு துயரம் இல்லாவிட்டால் மனம்திரும்பி வாழ்வது கடினம். சங்கீதக்காரன் சொல்லும்போது நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் என்று சொல்லுவதை பார்க்கிறோம்.
இரண்டாவதாக, மனம்திரும்பி வாழவேண்டும் என்ற துயரம் காணப்பட வேண்டும். பவுல் இப்படியாக சொல்லுகிறார் தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது (2 கொரிந்தியர் 7 : 10 ) என்பதாக. என்றாவது நாம் செய்த பாவம் நம்மை துயரத்தில் ஆழ்த்தி, படுக்கைக்கு செல்லும் முன் கண்ணீரால் தலையணையை நனைத்து மனம்திரும்ப ஒப்புக்கொடுத்திருக்கோமா.
மூன்றாவதாக, எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்ற துயரம் காணப்பட வேண்டும். பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம் (1 யோவான் 4 : 7 , 21 ) என்று ஆவியானவர் எழுதிவைத்திருப்பதை பார்க்கிறோம்.
நான்காவதாக ஆத்துமாக்களை குறித்த துயரம் இருக்க வேண்டும். …. சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது (ஏசாயா 66 : 8 ). ஜெபத்தில் ஜான் நாக்ஸ் துயரப்பட்டார், ஸ்காட்லாந்தை கர்த்தர் கொடுத்தார். ஜெபத்தில் ஜான் வெஸ்லி துயரப்பட்டார், மெதடிஸ்ட் திருச்சபைகள் தோன்றியது. ஜெபத்தில் மார்ட்டின் லூதர் துயரப்பட்டார், சீர்திருத்த சபைகள் உண்டானது. அப்படிப்பட்ட துயரம் வேண்டும்.
ஐந்தாவதாக, வேதனையிலிருக்கிறவர்களுக்காக துயர படவேண்டும். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர் (2 கொரிந்தியர் 1 : 4 ) என்று பவுல் சொல்கிறதே பார்க்கிறோம்.
ஆறாவதாக, விரக்தியிலிருப்பவர்களுக்காக துயரப்பட வேண்டும். எய்ட்ஸ், கேன்சர், பெரிய விபத்தினால் மரணம் வாசற்படியிலிருந்து, விரக்தியோடிருப்பவர்களுக்கு நம்முடைய ஜெபத்தில் துயரப்பட வேண்டும்.
அப்படியாக துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org