பலப்படும்போது உங்களைத் தாழ்த்துங்கள்(Humble yourselves when you become strong).

அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 2 நாளாகமம் 26:16.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gDkSAkxwwK8

யூதாவில் தோன்றின பத்தாவது ராஜாவின் பெயர் உசியா. அவன் பதினாறு வயதில் யூதாவின் மேல் ராஜாவானான். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேவனைத் தேட மனதாயிருந்தான். ஆகையால் தேவன் அவன் காரியங்களையெல்லாம் வாய்க்கச்செய்தார்.  அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, உண்மையாய் அவரைத் தேடும் போது கர்த்தர் உங்கள் காரியங்களை வாய்க்கப்பண்ணுவார். தேவனைத் தேடுவதற்கு உணர்வுள்ளவன் உண்டோ என்று கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் நோக்கிப்பார்க்கிறது. ஆகையால் தேவனைத் தேடுவதற்கு உங்களை உண்மையாய் அர்ப்பணியுங்கள்.

உசியா உண்மையாய் கர்த்தரைத் தேடுவதற்கு மனதிணங்கியிருந்ததினாலே அவன் சத்துருக்களை வெல்லுவதற்கும் கர்த்தர் அவனுக்குத் துணைநின்றார். ஆகையால் பெலிஸ்தியர்களையும், அரபியரையும், மெகுனியரையும், அம்மோனியரையும் அவன் முறியடித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் கர்த்தரைத் தேடும் போது, அவர் உங்கள் சத்துருக்களோடு உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், அவர்களை உங்களுக்கு முன்பாக சிதறடிப்பார், நீங்கள் தேடியும் காணாதிருக்கும்படிக்குச் செய்வார். உங்கள் கண்களுக்குத் தெரிகிற, உங்கள் கண்களுக்குத் தெரியாத அத்தனை சத்துருக்களையும் கர்த்தர்  உங்களுக்காக வீழ்த்துவார்.

உசியாவின் கீர்த்தி எங்கும் பரம்பிற்று, எகிப்தின் எல்லை மட்டிலும் எட்டினது என்று வேதம் கூறுகிறது. அவன் உண்மையாய், உத்தமமாய் கர்த்தரைச் சேவித்ததினாலே, அவன் கைகளின் கிரியைகளைக் கர்த்தர் ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணினார், ஆகையால், அவன் புகழ் எங்கும் பரம்பிற்று. அதுபோல பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்களிக்கிறார். ஆகையால் உண்மையாய் அவரைத் தேடுங்கள், கர்த்தருக்குப் பிரியமானதை அனுதினமும் செய்யுங்கள்.

 உசியா பலப்பட்டபோது, அவனுடைய மனம் மேட்டிமையடைந்தது. தனக்கு கேடுண்டாக  கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்தான். ராஜாவாய் மாத்திரம் காணப்படுவதில் திருப்தியடையாமல் ஆசாரியனாகவும் காணப்பட இச்சித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் தூபம் காட்டுவதற்கு உட்பிரவேசித்தான். ஆசாரியனான அசரியாவும் அவனுடனே காணப்பட்ட எண்பது பராக்கிரமசாலிகளும் எதிர்த்து நின்று ஆலோசனை சொன்ன போதும் அவர்கள் மேல் கோபம்கொண்டான். ஆகையால், கர்த்தர் அவனை குஷ்டரோகத்தால் அடித்தார், கடைசி மட்டும் குஷ்டரோகியாய் காணப்பட்டு, அந்த வியாதியாலேயே மரித்துப்போனான். கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து, நம்முடைய எல்லைகளைப் பெரிதாக்கி,  உயர்த்தும் போது, உயர்த்துகிற கர்த்தர் மேல் உங்கள் கண்களை எப்பொழுதும் பதியவையுங்கள், அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுங்கள். ஆசீர்வாதங்களின் மேல் கண்களை ஒருபோதும் வைத்துவிடாதிருங்கள், அப்படிச்செய்தால், நம்மை அறியாமலே பிசாசு நமக்குள் பெருமைகளை விதைத்துவிடுவான்.  பெருமையுள்ளவனுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார். கர்த்தர் நம்மை உலகப்பிரகாரமாகவும், ஊழியங்களின் பாதைகளிலும் உயர்த்தும் போது, நாம் அவருக்கு முன்பாக இன்னும் நம்மை தாழ்த்தி, அவரை இன்னும் அதிகமாய் தேட நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *