நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது (நீதிமொழிகள் 23:18).
சில நேரங்களில் சூழ்நிலைகள் நமக்கு எதிராய் நிற்கும். பிரச்சனைகள், குழப்பங்கள், வியாதிகள், வறுமைகள் வரும்போது நம்பிக்கை இழக்காமல் ஜெபத்தோடு தேவ சமூகத்தில் தரித்திருப்பது நல்லது.
யோபு கிழக்கத்திய புத்திரரிலும் ஐசுவரியவானாய் இருந்தவன். ஒரு சூழ்நிலையில் எல்லாவற்றையும் இழந்து நின்றான். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை, என்கிற நிலமைக்கு தள்ளப்பட்டான். ஒரு புறம் மனைவி நிந்தித்தாள், மறுபுறம் தன் சிநேகிதர்கள் நிந்தித்தார்கள், ஆனாலும் அவன் நம்பிக்கை இழக்கவில்லை, அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்(யோபு 13:15) என்று சொல்லி கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொண்டான். தன்னை நிந்தித்தவர்களுக்காக வேண்டுதலும் செய்தான், இதனால் கர்த்தர் அவன் சிறையிருப்பையும் மாற்றி இழந்துபோனதை இரட்டத்தணையாக திரும்பவும் தந்தார்.
தாவீது ஒரு சூழ்நிலையில் சகலத்தையும் இழந்துபோனான். ஒருபுறம் தனது மனைவிகளை இழந்தான் மறுப்புறம் தன்னை நம்பிருந்த குடும்பங்களை இழந்தான், அவனோடு இருந்தவர்களெல்லாம் அவனை கல்லெறியப்பார்த்தார்கள். ஆனாலும் அவன் தேவன்மேலுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை, தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, சத்துருக்களை பின்தொடர்ந்துபோய் பிடித்து சகலத்தையும் திருப்பிக்கொண்டான்(1சாமு 30:8).
ஒருவேளை நீங்கள் எல்லாவற்றையும் இழந்துப்போன சூழ்நிலையில் காணப்படலாம், மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு எங்களுக்கு உதவி செய்யவாருமில்லை என்று கலங்கி நிற்கலாம், நம்பிக்கையை இழக்காதிருங்கள், உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள், அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுகிறவர். ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர் (யோபு5:9). நம்பிக்கையோடு ஜெபத்திலே தரித்திருங்கள். உங்கள் சூழ்நிலைகள் மாறும் மூடப்பட்ட கதவுகள் திறக்கப்படும், அடைப்பட்ட வாசல்கள் வழியை உண்டுபண்ணும். நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது. இழந்துப் போனதை திரும்பப் பெற்றுக்கொள்ள தக்க வழிகள் திறக்கப்படும். விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுப்பித்து கட்டின கர்த்தர், உங்களையும் திரும்ப எடுப்பித்து கட்டுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David .P
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org