கர்த்தர் பக்தியுள்ளவனை தெரிந்துக்கொள்கிறார்.

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்(சங்கீதம் 4:3).

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துக்கொள்கிறார் அவர்களை ஆசீர்வதித்துமிருக்கிறார். யார் பக்தியுடையவர்கள்? கர்த்தருக்கு பயந்து, அவர் வழியில் செம்மையாய் நடந்து, நீதியைப் பிரப்பித்து, இடப்புறம் வலப்புறம் சாயாமல் கர்த்தருக்கென்று உண்மையாய் ஜீவிப்பவர்கள். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை மறுதலியாமல் இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்களை தமக்காகத் தெரிந்துக்கொண்டு அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

கர்த்தர் தமக்காக ஒரு ஜனக்கூட்டத்தை தெரிந்துக்கொண்டு, அவர்களுக்கு தன்னுடைய வார்த்தையை இரண்டு கருப்பலகையில் எழுதி தன்னை சேவிக்கும்படி அவர்களுக்கு கொடுத்தார். இவர்கள் என் ஜனம், நான் இவர்களைத் தெரிந்துக்கொண்டேன், என்று சொல்லி அவர்களுக்கு வாக்குத்தத்த பூமியையும் கொடுத்தார். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது(ஏசாயா 43:1,2) என்று அவர்களுக்கு வாக்குத்தத்தங்களையும் கொடுத்தார். ஆனால் இவர்களோ கர்த்தரை மறந்துபோனார்கள். கர்த்தருடைய வழியில் நடவாமலும், கர்த்தரை சேவிக்காமலும், அந்நிய தேவர்களை சேவித்தார்கள். கர்த்தரை பரீட்சைப்பார்த்து அவருக்கு கோபத்தை வரவழைத்தார்கள், தேவப்பக்தியற்றவர்களாய் போனார்கள். இதனால் கர்த்தர் இந்த ஜனத்தை தள்ளினார்.

இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்(ஏசாயா 43:21) நீ தேவனுடைய பிள்ளையென்றால் அவர் வழியில் செம்மையாய் நடப்பாய், கர்த்தருக்கென்று பக்திவைராக்கியமாய் எழும்புவாய். அவருக்கு எப்பொழுதும் துதிப்பலியை செலுத்தி வருவாய். அவர் துதியின் பலியை விரும்புகிறவர், அதில் பிரியப்படுகிறவர். அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை எப்போதும் தேவனுக்குச் செலுத்துவாய். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தன்னுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்பது கர்த்தருடைய வார்த்தை. அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் உன்னைத் தெரிந்துகொண்டிருக்கிறார். ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்(சங்கீதம் 22:30).

நீங்கள் தான் அந்த சந்ததி, நீங்கள் தான் தேவபக்கியுள்ள ஜனம். நீங்கள் கர்த்தருடையவர்கள், நீங்கள் அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமாயிருக்கிறீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *