அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக(சங்கீதம் 20:4).
கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறவர், மனவிருப்பத்திபடி அவர்களுக்கு தந்தருளி அவர்களை ஆசீர்வதித்து உயர்த்துகிறவர். கேட்கிற யாவரும் நிறைவாய் பெற்றுக்கொள்ளத்தக்க அவர்களை ஆசீர்வதிக்கிறார். சில வேளைகளில் கேட்டதையும் தருகிறார், கேட்காத ஆசீர்வாதத்தையும் தருகிறார்.
கர்த்தர் ஒரு இராத்திரியில் சாலமோனின் சொப்பனத்திலே தரிசனமாகி: “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்றார். சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக, தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர். இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க “ஞானமுள்ள இருதயத்தையும், அறிவையும்” எனக்குத் தந்தருளும் என்றான், இது கர்த்தருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், “உன் வார்த்தைகளின்படி செய்தேன்”, ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தையும் உனக்குத் தந்தேன். இதுவுமன்றி, நீ “கேளாத ஐசுவரியத்தையும்” மகிமையையும் உனக்குத் தந்தேன்(1 இராஜா3:12,13) என்றார்.
கர்த்தர் இன்று உன்னைப் பார்த்துக் கேட்பதென்ன? நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள், அதை உனக்கு தருவேன். ஒரு கானானிய ஸ்திரீ, இயேசுவைப் நோக்கி; ஆண்டவரே என் பிள்ளைக்கு இரக்கும் என்று கேட்டாள், அவளின் விசுவாசத்தின்படியே இயேசு அவளின் விருப்பத்தை நிறைவேற்றினார். நீங்கள் ஜெபத்தில் எவற்றை கேட்கிறீர்களோ அவற்றை மனநிறைவாய்ப் பெற்றுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை நோக்கி; இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்(யோவான் 16:24) நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்குக் கொடுப்பார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்(சங்கீதம் 145:19) கர்த்தர் யாரைத் தெரிந்துக்கொள்கிறாரோ அவர்களை இரட்சிக்கிறார், அவர்களின் மனவிருப்பத்தையும் நிறைவேற்றுகிறார்.
கர்த்தர் தாமே உங்களுடைய மனவிருப்பத்தின்படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org