என் ஜனமே கேள், எனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன், இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்(சங்கீதம் 81:8).
தேவனுடைய விருப்பமெல்லாம் தன் ஜனங்கள் தன்னுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, தன்னுடைய வழியில் செம்மையாய் நடக்கவேண்டுமென்பதே அவருடைய வாஞ்சையாயிருக்கிறது. இது ஒரு மெய்யான தேவனின் விருப்பமாயும் உள்ளது.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே நெருக்கப்பட்ட வேளையில் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். கர்த்தர் அவர்களை அங்கிருந்து விடுவித்தார். நாற்பது வருஷமளவும் கர்த்தர் அவர்களை வனாந்தரத்திலே நடத்தி அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, பகலிலே வெயிலாயிலும், இரவிலே நிலவாகிலும் அவர்களை சேதப்படுத்தாதப்படிக்கு பாதுகாத்தார். பத்துக்கட்டளைகளை கொடுத்து, நானே உன் தேவனாகிய கர்த்தர். உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம், அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்(சங் 81:9) என்று கர்த்தர் சொல்லியிருந்தும் அவர்கள் தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுக்காமலும் அவருடைய வழியில் செம்மையாய் நடவாமலும் போனார்கள். தங்களுடைய யோசனையின்படியே நடக்க விரும்பினார்கள்.
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை(சங் 81:11) அவர்கள் தேவனுடைய இருதயத்தை மிகவும் துக்கப்படுத்தினார்கள். நாமும் கூட அநேக வேளையில் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் அவரை துக்கப்படுத்தியிருக்கிறோம். அவரைத்தேடாமலும் அவருடைய வழியில் நடவாமலும், சுய யோசனையின்படி நடந்து, அவரைத் துக்கப்படுத்தியிருக்கிறோம். இப்படிப்பட்ட பொல்லாங்கை விட்டு விலகி நாம் மனந்திரும்புவது அவசியமாய் இருக்கிறது.
கர்த்தர் மிகவும் இரக்கக்குணமுடையவர். தன்னுடையப் பிள்ளைகளின் தேவைகளை அறிந்தவர். தன் சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்களை ஆசீர்வதிக்கிறவர். என் ஜனமே கேள்; நீ எனக்கு செவிகொடுத்தால் நலமாயிருக்கும். உன் வாயை விரிவாய்த்திற, நான் அதை நிரப்புவேன். உச்சிதமான கோதுமையினால் உன்னை போஷித்து, கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்(சங் 81:16) என்பது கர்த்தருடைய வார்த்தை. யாரெல்லாம் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறார்களோ அவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.
நீங்கள் தேவனுடைய ஆடுகளாய் இருக்கிறீர்கள், அவர் மேய்ப்பராக இருக்கிறார். நீங்கள் அவருடைய ஆடுகளாய் இருப்பீர்களானால், அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27) அவர் நல்ல மேய்ப்பராக இருந்து தன் ஆடுகளை வழி நடத்துகிறார். அவைகளின் தேவைகளையும் அறிந்திருக்கிறார். அவர் தன் ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவைகளுக்காக தன் ஜீவனையும் கொடுத்து பாதுகாக்கிறார்.
தேவனுடைய பிள்ளைகளே; கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுங்கள், அவருடைய வழியில் செம்மையாய் நடவுங்கள். அவருடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவரும். என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள், என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள், வேதம் என்னிலிருந்து வெளிப்படும், என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்(ஏசாயா 51:4).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org