மனமேட்டிமையுள்ளவவெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் கையோடே கைகோர்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்(நீதிமொழிகள் 16:5)
மனமேட்டிமையுள்ள எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று வேதம் கூறுகிறது. தேவன் அருவருக்கிற காரியங்களில் ஒன்று மனமேட்டிமை. இது எப்பொழுது ஒரு மனிதனுக்குள் வருகிறதோ அப்பொழுதே அவன் மரணத்திற்கு பாத்திரவனாகிறான். இப்படிப்பட்டவர்களுக்கு ஆஸ்தி அந்தஸ்துகள் கூடும்போது கர்த்தரை மறந்து மனமேட்டிமை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சுபாவமுடையவர்களை கர்த்தர் நொறுக்கிப்போடுகிறார். ஒருவரும் அவருடைய தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. அழிவுக்கு முன்னானது அகந்தை: விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை(நீதி16:18).
உசியா ராஜாவைக் குறித்து பார்க்கும்பொழுது அவன் மனமேட்டிமையின் நிமித்தம் விழுந்துபோனான்; உசியா ராஜா பதினாறு வயதில் யூதாவின்மேல் அரசனாகி ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். இவன் தன் தகப்பனைப்போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்து தேவனை அதிகமாய் தேட ஆரம்பித்தான். இதனால் கர்த்தர் அவன் காரியங்களையெல்லாம் வாய்க்கும்படி செய்தார். அவனுக்கு விரோதமாக எழும்பின எல்லா சத்துருக்களையும் முறியடித்தான். அநேகர் அவனுக்கு காணிக்கைகளை கொண்டுவந்தார்கள். இதனால் அவனுடைய கீர்த்தி எகிப்து தேசம் மட்டும் எட்டினது. அவன் மிகவும் பலங்கொண்டான்(2 நாளா 26:8).
அவன் எருசலேமிலே கோபுரங்களையும், மதில்களையும் கட்டிப் பலப்படுத்தினான். அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளிகளிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான், அவன் வெள்ணாண்மைப் பிரியனாயிருந்தான். மேலும் கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையம் ஆயத்தப்படுத்தினான். இதனால் அவனுடைய கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று. அவனுடைய ஆஸ்தி அந்தஸ்து கூடின வேளையில் அவன் இருதயம் மனம் மேட்டிமைகொண்டது. அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும் அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்(2 நாளா26:16) ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் பலிபீடத்திற்கு தூபம் காட்டக்கூடாது என்பது கர்த்தருடைய பிரமாணம். அவன் பிரமாணத்தை மீறினான். இதனால் கர்த்தர் அவன்மேல் கோபம்கொண்டு அவனை அடித்தார். அவனுடைய நெற்றியில் குஷ்டரோகம் தோன்றிற்று. அவன் தன் மரண நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து மரித்துப்போனான்.
மனமேட்டிமை கொள்வதே பாவம். பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்(1 யோவான் 3:4) மனமேட்டிமையின் விளைவு ஒரு மனிதனை பிரமாணத்தை மீறவைக்கிறது. தேவனுடையப் பிள்ளைகள் எந்த சூழ்நிலையிலும் மனமேட்டிமை வராமல் காத்துக்கொள்வது அவசியம். நம் தேவன் ஐசுவரியத்தில் பெரியவர். தம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறவர். ஆசீர்வாதங்கள் வரும்போது மனமேட்டிமைகொள்ளாமல் தேவ சமூகத்தில் தங்களைத் தாழ்திக்கொள்ளுங்கள். ஒருபோதும் மேட்டிமையானவைகளை சிந்தியாமலும், தன்னை புத்திமானென்று எண்ணாமலுமிருங்கள்(ரோமர் 12:16) சவுலின் இருதயம் மனமேட்டிமை கொண்டதினால் “புத்தியினமாய்” பிரமாணத்தை மீறினான். இதன் விளைவு துணிகரமாய் கர்த்தருக்கு சர்வாங்கதகனப்பலியை செலுத்தி பாவத்தை சம்பாதித்துக்கொண்டான். இறுதியில் அவனுடைய மரணம் பரிதாபமாய் அமைந்தது.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் மனமேட்டிமைக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட சுபாவம் ஒருவேளை உங்களுக்குள் இருக்குமானால் இப்பொழுதுதே தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு அவரோடு ஒப்புரவாகுங்கள். அவர் உங்களை மன்னித்து தன்னோடு சேர்த்துக்கொள்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org