என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? சங். 56:8
நம்முடைய தேவன், நம் அலைச்சல்களை அறிகிறவர், கண்ணீரைக் காண்கிறவர். கண்ணீரின் ஜெபங்களை ஒருபோதும் அற்பமாய் அவர் கருதுவதில்லை. உபத்திரவப்படுகிறவர்களுடைய உபத்திரவத்தைக் கர்த்தர் ஒருநாளும் மறந்துவிடுவதில்லை. ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள்.
இந்த சங்கீதம் பெலிஸ்தர் தாவீதை காத்தூரில் பிடித்தபோது பாடின சங்கீதம் எனத் தலைப்பு கூறுகிறது. சவுலுக்குப் பயந்து உயிர் தப்புவதற்கு தாவீது காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான், தஞ்சமும் உதவியும் எதிர்பார்த்துப் போனான் (1 சாமு. 21:11-13). தன்னை தாவீது என்று அவன் அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஆகீசின் ஊழியக்காரர் அவனைக் கண்டுபிடித்து, தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். எதிரிகளின் கையிலே அகப்பட்டதையறிந்த தாவீது, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான். தாவீது பயித்தியக்காரன் போலத் தன்னை வெளிப்படுத்தினான். பின்பு தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அப்போது என் அலைச்சல்களைக் கர்த்தர் எண்ணியிருக்கிறீர், என் ஜெபமாகிய கண்ணீரின் விதைகள் ஒவ்வொன்றும் உம்முடைய கணக்கில் இருக்கிறது என்று உள்ளம் உருகி ஜெபித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது சவுலுக்குத்தப்பி, ஆகீசின் கரங்களில் விழுந்தது போல, ஒரு பிரச்சனையிலிருந்து கரையேறும் போது இன்னொன்று வந்துவிடுகிறது என்று மனமுடைந்து காணப்படுகிறீர்களா? வீணான அலைச்சல்களும், தேவையில்லாத செலவினங்களும் வருகிறது என்று வேதனையோடு காணப்படுகிறீர்களா? கர்த்தர் உங்கள் நிலைமைகளை அறிந்திருக்கிறார். தாவீதின் அலைச்சல்களைக் கண்டு, அவனை விடுவித்து உயர்த்தி ஆசீர்வதித்த தேவன், உங்கள் அலைச்சல்களையும் நிறுத்தி, உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். உங்கள் கண்ணீரின் ஜெபங்களுக்குப் பதில் தந்து மகிழச்செய்வார்.
பிரச்சனைகள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கி உங்களைப் பயப்படுத்தும் போது, நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் (சங். 56:3) என்ற தாவீது கூறினதைப் போல, கர்த்தரை முழுமையாய் நம்புங்கள், அவரை முழுவதுமாய் சார்ந்துகொள்ளுங்கள். அப்போது கர்த்தர் உங்கள் பயங்களை உங்களை விட்டு விலக்கிவிடுவார். கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரையே தன் நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாக்கியவான்களாய், பாக்கியவதிகளாய் மாற்றி, உங்களை வாழவைப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org